எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு இலவசமாக 1000 குடைகளை வழங்கிய பள்ளி ஆசிரியை

Monday, September 16, 2019




நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு ஆசிரியை ஒருவர் தனது சொந்தப் பணத்தில் வாங்கிய ஆயிரம் குடைகளை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மு. வசந்தா சித்ரவேல். இவர், அருகேயுள்ள அண்டர்காடு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியின் ஆசிரியை. கற்பித்தல் பணியை பல நேரங்களில் புதுமையாகவும் ஈடுபாட்டோடும் செயல்படுவதில் ஆசிரியை வசந்தா தனித்துவம் பெற்றவர். இவரது கல்வி சேவையை பாராட்டி சில அமைப்புகள், நாளிதழ் உள்ளிட்ட நிறுவனங்கள், சேவை அமைப்புகள் விருதுகள் அளித்து பாராட்டியுள்ளன.
இந் நிலையில், தனது சொந்த நிதி ரூ. ஒரு லட்சத்தில் ஆயிரம் குடைகளை வாங்கி அவற்றை 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்துள்ளார்.
ஆயக்காரன்புலம்-2 ஆம் சேத்தி நாடிமுத்து உதவி பெரும் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் அ. மதியரசு முன்னிலை வகித்தார்.
குடை வழங்கும் பணியை தொடங்கி வைத்த வட்டாரக் கல்வி அலுவலர் சிவகுமார் பேசியது: கற்பித்தல் மற்றும் சமூகப் பணியில் ஈடுபாடுடன் தொடர்ந்து செயல்படும் ஆசிரியை வசந்தாவின் பணி பாராட்டுக்குரியது. கஜா புயல் பாதிப்பின் போது, இப்பகுதி மக்களுக்கு தனது மகள் உள்ளிட்ட குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் தன்னார்வலர்களின் உதவியோடு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவிகளை செய்துள்ளார். தம்மால் இயன்றதை பிறருக்கு செய்யும் எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். அந்த வகையில், குடையை கொடையாக அளிக்க முன்வந்த வசந்தா ஆசிரியை முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றார் அவர்.
இது குறித்து ஆசிரியை வசந்தா பேசியது: கடந்த ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை படிப்பினையாகக் கொண்டு நெருங்கி வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மாணவர்களின் வருகைக்கு மழை ஒரு தடையாக இருக்கக் கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் குடை அவசிய தேவை. இதை கருத்தில் கொண்டுதான் மருத்துவரான எனது மகள் உதவியோடு இந்த பணியை ஏற்றுக்கொண்டுள்ளேன். முதல் கட்டமாக இந்த பகுதிக்குள்பட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு குடைகள் அளிக்கப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில், மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் தாமோதரன், நல்லாசிரியர் செல்வராசு, ஆசிரியர்கள் வீரசேகரன், அய்யாதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One