எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி ஆசிரியர்கள் சொத்து விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: கல்வித் துறை உத்தரவு உத்தரவின் பின்னணி என்ன?

Wednesday, September 4, 2019
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும், அசையாச் சொத்து விவரங்களைப் பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்ய  வேண்டும் என  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு,  அரசு உதவிபெறும், நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் அசையும், அசையாச் சொத்துகளின் விவரங்கள் சார்ந்த பணியாளர்களின் பதிவேட்டில் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.  அதில் ஏதேனும் முரண்பாடுகள் நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையினர் அறிக்கையின்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இந்த உத்தரவை செயல்படுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்,  அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

உத்தரவின் பின்னணி என்ன?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.அன்னாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்,  அரசின் பிரதிநிதிகளாக அரசுப் பணியாளர்கள் இருப்பதால் வருகைப் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைப்பது விதிமீறல் இல்லை.  ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை, பணி நேரத்துக்கு முன்பாக பள்ளியிலிருந்து சென்று விடுவதாகவும், இடைப்பட்ட நேரத்தில் ஆசிரியர் பணிக்கு தொடர்பில்லாத பல்வேறு பணிகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்களிடம் இருந்து அரசுக்குப் புகார்கள் வருகின்றன. எனவே ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் இதுபோன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரும் தொகையை அரசு ஆண்டுதோறும் வழங்கினாலும், சிறந்த கல்வி மாணவர்களுக்குக் கிடைப்பது இல்லை.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களைத் தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை பணிப் பதிவேட்டில் உள்ள ஆசிரியர்களின் சொத்து விவரங்களுக்கும், ஆசிரியர்களின் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால் அவர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.  இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாக மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One