எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உயர்தர கல்வியோடு, மாணவருக்கான அக்கறையும், ஆரோக்கியத்தையும் சத்துணவோடு சேர்ந்தே ஊட்டி வரும் அரசுப்பள்ளி

Sunday, September 15, 2019
மதியம், 12:30 மணிக்கு பெல் அடித்ததும், சத்துணவுக்கு தட்டை துாக்கிக்கொண்டு ஓடும்போது தான், குழந்தைகளுக்குள் இருக்கும், ஒவ்வொரு, 'உசேன் போல்ட்'டும் வெளியே வருகிறான். அந்தளவு, ஒருவேளை சத்துணவுக்காகவே பள்ளிக்கூடம் பக்கம் தலையை காட்டியவர்கள் ஏராளனமானோர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய எந்தவொரு குழந்தையும் பசியோடு கல்வி கற்க கூடாது என்பதற்காக அறிமுகப்படுத்தபட்ட சத்துணவுத்திட்டத்தை ஆத்மார்த்தமாக செய்யும் அரசுப்பள்ளிகள் இங்கே குறைவுதான். இந்த சூழலில் உயர்தர கல்வியோடு, மாணவருக்கான அக்கறையும், ஆரோக்கியத்தையும் சத்துணவோடு சேர்ந்தே ஊட்டி வருகிறது, 15, வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி.


பளபளக்கும் ஈய பாத்திரத்தில் சமைக்கப்பட்டிருந்த எலுமிச்சை கலவை சாதம்...சற்று மசிந்தும் அதே நேரத்தில் சோறும் காயாமல் இருக்கிறது. லேசான ஈர ஜொலிப்போடு, அருகேயே வேகவைத்து மசாலா தடவிய முட்டைகள் ஒன்றுகூட உடையாமல், பரிமாற தயாராகிறார் புஷ்பவதி எனும் 'புஷ்பக்கா'. மதிய உணவு பெல் அடித்ததும், வரிசையில் ஒருவரை ஒருவர் முந்தாமல், இடிக்காமல் வரும் குழந்தைகள் இன்னமும் ஆச்சர்யமூட்டுகிறார்கள். உணவு வாங்க வரும் மாணவனின் பாத்திரத்தையும், வாங்கிய பிறகு அவனது முகத்தையும் ஆராய்ந்த பிறகே சாதம் பரிமாறப்படுகிறது. முகம் லேசாய் ஒரு துளி வாடினால் கூட, 'சாப்பிட்டு விட்டு வந்து திரும்பவும் வாங்கிக்கோ' என்கிற தைரியமூட்டலில் சந்தோஷமாய் தலையாட்டிப் போகிறான் அந்த மாணவன்.

இப்படி சமையல் கைப்பக்குவத்தில் மட்டுமல்ல... அன்போடு, அக்கறையும் சேர்ந்து பரிமாறும் புஷ்பவதி இந்த சமையல் பணியின், மூன்றாவது தலைக்கட்டை சேர்ந்தவர் என்பதுதான் இங்கே சுவாரசியம்.

இதே பள்ளியில், 1983 முதல் பத்து வருடங்களாக கிட்டம்மாள் என்பவர் சத்துணவு ஆயாவாக பணியாற்றி இருக்கிறார். அவர் மறைவுக்கு பின் அவரது மருமகள் முத்தம்மாள் என்பவர் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். அவரும் இறந்துபோக, தற்போது அவரது மருமகள் புஷ்பவதி, 2008ல் இருந்து சத்துணவு சமையலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சமையல் செய்யும் நேர்த்தியை, சொல்லாமல் சொல்கிறது, 'ஈ, கொசு, குப்பை.. எதுவும் இன்றி துாய்மையாக இருந்த சமையல்கூடம். சில நுாறடி தொலைவில் இருந்தாலும் இவரின் அன்றைய மெனுவை வகுப்பறையில் இருந்தபடியே நுகர்ந்து விடுகின்றனர் குழந்தைகள்.இதுகுறித்து புஷ்பக்காவிடம் பேசினோம்...

ஆரம்பத்தில் இந்த பள்ளியில் குழந்தைங்க ரொம்ப கம்மி. வீடு வீடாக போய் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வர வைக்கவே டீச்சர்கள் பெரும்பாடு பட்டாங்க... என் மாமியாருக்கு மாமியார் காலத்தில் புகை அடுப்பில்தான் சமையல் செய்ய வேண்டும். அவரின் கைப்பக்குவம், ருசியான சாப்பாட்டுக்கே குழந்தைகள் பள்ளிக் கூடம் வந்ததாக பழைய டீச்சர்கள் சொல்வாங்க.

இந்த கைப்பக்குவத்தை என் மாமியாரிடம் இருந்து கெட்டியாக நானும் புடிச்சுக்கிட்டேன். சாம்பார் சாதம், புளிசாதம் பல குழந்தைகளின், 'பேவரைட்'. தினமும் ஒவ்வொரு மெனு. சாப்பாடு, சாம்பார், வாரத்தில் ஐந்து நாள் அவித்த முட்டை, ஒரு நாள் கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து கொடுக்கிறோம். சத்துணவு டீச்சர் ஜான் பேடியும் எனக்கு உறுதுணையாக இருக்காங்க.

கூடவே, கொண்டைக் கடலை பிரியாணி, தக்காளி புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீரை சாதங்கள், பிஸ்மலாபாத், கடலை குழப்பு சாதம், சாம்பார் சாதம், பிரைடு ரைஸ், காய்கறி கலந்து மசால் சாதமும் இருக்கு. ஆரம்பத்தில், கடமைக்காகத்தான வந்தேன். பசியோடு வரும் பிஞ்சு குழந்தைங்க வயிறு நிறையும் போது, மனசும் நிறைவாக இருப்பதை உணர முடிஞ்சது என்று விவரிக்கிறார்.

தலைமை ஆசிரியர் ராதாமணி கூறுகையில், ''புகை, கரி படிந்த இருளான சமையல் அறை, ஒடுங்கி கறை பிடித்த பாத்திரங்கள், சுகாதாரமில்லா சாப்பாடு, பள்ளத்தை நோக்கி பாயும் சாம்பார்... இவையெல்லாம், அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களின் அடையாளம். தற்போது, பள்ளி சத்துணவு திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது'' என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One