எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கனவு கிராமத்தை உருவாக்கும் ஆசிரியர்!

Sunday, September 15, 2019


சுயநலம் மட்டுமே பிரதானம் என்று செயல்படுவோர் மத்தியில், தான் சார்ந்த கல்வித் துறையில் சிறப்பாக செயல்படுவதுடன், தனது கிராமத்தையும் பசுமையாக மாற்றும் நோக்கில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நாமக்கல் அருகேயுள்ள ஜம்புமடையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ப.தமிழ்ச்செல்வன். ஊர் பொதுக் கிணற்றை சுத்தம் செய்வது, குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பு நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும் தமிழ்ச்செல்வனை சந்தித்தோம்.

'பூர்வீகமே ஜம்புடை கிராமம்தான். ஏழை விவசாயக் குடும்பம். அரசு விடுதிகளில் தங்கி, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயின்றேன். 2004-ல் அரசுப் பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டேன். தற்போது நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறேன். 2017-2018-ல் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது கிடைத்தது. இதில் கிடைத்த ரூ.10ஆயிரத்தை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மேம்பாட்டுக்கு வழங்கினேன்.

எங்களது கிராமத்திலிருந்து அரசுப் பணிக்கு சென்ற முதல் நபர் நான்தான். எனவே, என்னைப் போன்ற கிராம இளைஞர்கள், அரசுப் பணிக்குச் செல்ல வேண்டுமென்ற நோக்கில் 2007 முதல், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறேன். என்னிடம் பயின்ற 12 பேர் அரசுப் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர். அவர்களும் தற்போது பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். எனது வீட்டின் ஒரு பகுதியில் நூலகம் அமைத்து, அனைவரும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளேன்.

முன்பு பசுமையாய் காட்சியளித்த எங்கள் கிராமத்தில் தற்போது குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தண்ணீரின்றி விவசாயம் நலிந்துவிட்டது. இதெற்கெல்லாம் தீர்வாக, மரக்கன்றுகள் நட முடிவு செய்தேன். என்னிடம் பயின்ற மாணவர்கள், கிராம மக்களை ஒருங்கிணைத்து, வளையப்பட்டி முதல் எங்கள் கிராமம் வரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க முடிவு செய்துள்ளேன். ஓராண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் முயற்சித்து வருகிறோம்.

கிராமத்தில் நடைபெறும் திருமணங்களின்போது, மணமக்கள் மரக்கன்றை நடுகின்றனர். இதேபோல, பண்டிகை, விடுமுறை தினங்களிலும் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து சேதப்படுத்தாமல் இருக்கும் வகையில், கம்பி வலை அமைத்துள்ளோம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, கிராமத்தில் உள்ள பழமையான, 60 அடி ஆழக் கிணற்றை ரூ. 35 ஆயிரம் மதிப்பில் தூர் எடுத்துள்ளோம்.

மேலும், கிணற்றில் சுத்தமான நீர் இறங்குவதற்காக, கிணற்றையொட்டி 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டவும் முடிவு செய்துள்ளோம். எங்களது பணியைப் பாராட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியது. மேலும், பனை மர விதைகளைத் தூவும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். கிராமத்தை தூய்மையாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 'நமது கிராமம்' என்ற வாட்ஸ்அப் குழுவையும் உருவாக்கியுள்ளோம். கிராமத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் இக்குழுவில் பகிரப்படுகிறது' என்றார்.

1 comment

  1. Arumai sir menmelum sirakka vazhthukkal
    Namadhu gramam watsup no pakiravum

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One