எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கேரளாவில் 28 சதவீதம் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமை

Sunday, March 25, 2018

 கேரளாவில் 28 சதவீதம் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமை

திருவனந்தபுரம்: இந்தியாவில் போதைப் பொருள் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக தினமும் 10 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த இரு  வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.கேரளா சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதைப்  பொருள் பயன்படுத்துபவர்களில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அடுத்த படியாக கொச்சி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் திருவனந்தபுரத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்  கிடைத்துள்ளன. கேரளாவில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதாக அந்த ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
 பள்ளி மாணவர்களில் 28.7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களில் தொடங்கி கஞ்சா,  பிரவுன் சுகர் வரை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே தான் போதைப் பொருள் பழக்கம்  அதிக அளவில் உள்ளது.14க்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களில் 44.4 சதவீதம் பேருக்கு போதைப் பழக்கம் உள்ளது. 8ம் வகுப்பு படிப்பவர்களில் 23.1 சதவீதம் பேர்  போதைக்கு அடிமையாகி உள்ளனர். 85.8 சதவீதம் மாணவர்களுக்கும் போதைப் பொருளால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து நன்றாகவே  தெரியும். ஆனாலும் அவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக ஜாலியாக தொடங்கும் இந்த பழக்கத்திற்கு மாணவர்கள் நாளடைவில் முழு அடிமையாகி விடுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் மிக எளிதில் கிடைக்கிறது. மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு  ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஏஜெண்டுகள் மூலம் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். மாணவர்களும் இதற்கு  ஏஜெண்டாக செயல்பட்டு வருகின்றனர்.போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் பணத்திற்காக தங்களது சொந்த வீடுகளில் திருடுவதும் உண்டு. 41.3 சதவீதம் மாணவர்கள் போதைப் பொருள்  வாங்குவதற்காக தங்களது வீடுகளில் திருடுகின்றனர்.போதைப் பொருள் என்றால் பலருக்கும் கஞ்சா, பிரவுன் சுகர் போன்றவை தான் நினைவுக்கு வரும். ஆனால் போதைக்காக பெட்ரோல், பெவிக்கால்,  ஒயிட்னர் போன்றவற்றை பயன்படுத்தும் கொடுமையும் உண்டு. 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 23.1 சதவீதம் பேரும், 9ம் வகுப்பு படிப்பவர்களில்  22.4 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு படிப்பவர்களில் 16.2 சதவீதம் பேரும், பிளஸ் 1 படிப்பவர்களில் 19.4 சதவீதம் பேரும், பிளஸ் டூ படிப்பவர்களில் 18.9  சதவீதம் பேரும் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.

 மாணவர்களில் 40.8 சதவீதம் கள்ளுக்கும், 25.4 சதவீதம் பேர் கஞ்சாவுக்கும், சாராயத்துக்கும், மதுவுக்கு 28.9 சதவீதம் பேரும், பிரவுன் சுகருக்கு 2  சதவீதமும், பான்மசாலாவுக்கு 34.6 சதவீதமும்,  சிகரெட்டுக்கு 5.3 சதவீதம் பேரும் அடிமையாகி உள்ளனர். 22.7 சதவீதம் நண்பர்கள் மூலம் தான்  மாணவர்களுக்கு போதைப் பொருள் கிடைக்கிறது. பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவது எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  எனவே அரசும், காவல் துறையும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடாவிட்டால் வரும் தலைமுறைக்கு பெரும் ஆபத்து ஏற்பட அதிக  வாய்ப்புகள் உள்ளன.

* தேசிய குற்ற ஆவண காப்பக கணக்கின்படி கடந்த 2014ம் ஆண்டில் போதைப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை  3647.
* மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக அதிகமாக 1372 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
* தமிழ்நாட்டுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 552.
* இதற்கு அடுத்ததாக கேரளாவில் 475 பேர் தற்கொலை செய்துள்ளனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One