எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

`இந்தப் பிள்ளைகளுக்கு அறிவைப் பாரேன்'- கிராமத்து மக்களை ஆச்சர்யப்படவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

Sunday, March 25, 2018


இப்போது உலகளாவிய அளவில் மண்ணின் வளத்தையும், மனிதனின் வளத்தையும் கெடுக்கும் வகையில் முதல் இடத்தில் இருக்கும் வஸ்து பிளாஸ்டிக்குகள்தான். காற்றுபோல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. ஆனாலும், பெரும்பாலோனோர் இன்னும் பிளாஸ்டிக்கைதான் அனுதினமும் தங்கள் அன்றாட விசயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் விடுமுறை நாள்களில் வெள்ளியணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களிடம் பிளாஸ்டிக்கின் தீமைகளை விளக்குவதோடு, மாற்றாக தங்கள் கையோடு கொண்டு போகும் துணி பைகளைக் கொடுத்து, 'இதை பயன்படுத்துங்க. பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் நோய்களைத் தவிருங்கள்' என்று விழிப்பு உணர்வு செய்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களான மனோகர் மற்றும் வெங்கடேசன் ஆகியோரது ஆலோசனையின் பேரில் இந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இத்தகைய அசத்தல் விழிப்பு உணர்வு நிகழ்வை அரங்கேற்றுகிறார்கள். பொது இடங்கள், சாலையோரங்கள், வீடுகளில் கிடக்கும் பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து, அப்புறப்படுத்துகிறார்கள்.

அதைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்றும், எதிர்ப்படுபவர்களிடம், பகுதி இளைஞர்களிடமும், விழிப்பு உணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துணிப் பைகளை வழங்கி, 'மனிதர்களுக்கு எமனாக மாறும் பிளாஸ்டிக் வேண்டாம். அரணாக இருக்கும் துணிப்பை போதும்' என்று புன்சிரிப்போடு வழங்குகிறார்கள். இதனால், அதை பெற்றுக் கொள்ளும் மக்கள், 'இந்தப் பிள்ளைகளுக்கு நமக்கில்லாத அறிவைப் பாரேன். அதுக்குதான் நாலு எழுத்து படிக்கணும்ங்கிறது. இனிமேல் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தமாட்டோம்' என்று சத்தியம் செய்யாத குறையாக உறுதியாகச் சொல்கிறார்கள்.

அந்த மாணவர்களிடமே பேசினோம். ``எங்க ஆசிரியர்கள் மனோகர் சாரும், வெங்கடேசன் சாரும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகள் பற்றி அடிக்கடி விளக்குவாங்க. இதனால், ஒரு வருடமாகவே நாங்கள் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாகத் துணி, பேப்பர் பைகளையே பயன்படுத்துகிறோம். அதோடு, இந்தப் பகுதி மக்களையும் விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைத்தோம். அதற்காக,1000 துணிப்பைகளை முதல்கட்டமாக விழிப்பு உணர்வு வாசகங்களோடு அச்சடித்தோம். நாங்கள் செல்லும் பகுதிகளில் கிடைக்கும் பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து முதலில் அப்புறப்படுத்திவிட்டு, பிறகு இந்தத் துணிப்பைகளை வழங்கி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துகிறோம். இங்குள்ள பத்து கிராமங்களிலும் ஒருத்தர்கூட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாத சூழல் வரும்வரை எங்களது இந்த விழிப்புணர்வு நிகழ்வு தொடரும்"; என்றார்கள்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One