எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: விஜயகாந்த்

Thursday, April 26, 2018


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால், தேமுதிக அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி நான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருப்பது வேதனையளிக்கிறது. இந்தப் பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்க்கவேண்டிய அமைச்சர் செங்கோட்டையன் அமைதி காப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? இது சாத்தியமா? இல்லையா? என அலசி ஆராய்ந்து, பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் நல்ல அரசுக்கு இலக்கணமாக இருக்கும்.

ஆனால், தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் தலைமையிலான குழுவை அழைத்து உடனடியாக இன்றே அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களின் பிரச்சினையான 7-வது ஊதியக்குழுவின் ஊதியம் அமல்படுத்தப்பட்டபின் 15 ஆயிரம் ரூபாய் வித்தியாசப்படுவது குறித்து ஆராய வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி சமவேலைக்கு சம ஊதியம் கொடுக்க வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் ஒற்றைக் கோரிக்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நியாயப்படி பணிக்கால அடிப்படையில் யார், யாருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என ஆராய்வதற்கு ஒரு குழு அமைத்து இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணலாம்.

ஆனால், இதற்கு ஏன் காலம் தாழ்த்துகிறார்கள் என்பதுதான் இங்கே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இன்று நான்காவது நாளாக கடுமையான வெயில் மற்றும் கோடைக்காலமாக இருப்பதால் உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் பல பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதநேயம் கருதி போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் குழுவை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக இன்றே தீர்வு காண வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் இந்தப் பிரச்சினையை அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தேமுதிக எடுத்துச்செல்லும். இத்துறை அமைச்சரும், தமிழக அரசும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One