எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர்

Thursday, May 17, 2018


திருப்பூர் தாய்த்தமிழ் மற்றும் தொடக்கப்பள்ளியின் தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர்……

சில வாரங்களுக்கு முன்பு முகநூலில் இந்த மலர் பற்றி அறிந்தேன். பிறகு முகநூலில் முகவரி தந்து இந்த கல்விச் சிறப்பு மலரைப் பெற்றேன். மலரின் வடிவமைப்பைப் பார்த்ததும் பிரபல இதழ்கள் வெளியிடும் தீபாவளி மலர் போல அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தது…
உள்ளே திறந்து வாசிக்க வாசிக்க திகைத்துப்போனேன்.
“தாய்மொழிக் கல்விக்காக களத்தில் போராடும் கல்விப் போராளிகளுக்கு” என மலர்  படையலாக்கப்பட்டிருந்தது.

“மொழிதான் ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரண்! ஓர் இனத்தின் ஆணிவேர்! ஒரு  தேசம் தன்மானத்துடனும் தன்னிறைவுடனும் வாழ்வதற்கு தேவையான உயிர்ப்பைத் தரும் காற்றாகவும், மழையாகவும், ஒளியாகவும், திகழ்வது அதன் மொழியே. அதன் மொழியை கல்வியில் இருந்து அப்புறப்படுத்துவது அந்த இனம் வேரற்றுப், பசையற்றுப் போவதற்கே வழிவகுக்கும். எனவே, தமிழினம் வேர் உற்றதாகவும், பசை உள்ளதாகவும் வாழ வேண்டுமானால், அதன் கல்வி மொழி தமிழாக விளங்க வேண்டும். தொடக்கக் கல்வி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும்” என்று இரணியன் என்பார் இந்நூலின் ஓரிடத்தில் கூறியிருப்பார்.
இந்தக் காரணமே பலவித இன்னல்களைத் தாண்டி இந்தத் தமிழ்வழி தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடத்தப்படுவதன் நோக்கமும் ஆகும். 1995ம் ஆண்டு 25 குழந்தைகளோடு  தொடங்கப்பட்ட  இந்தப் பள்ளி தற்போது 256 குழந்தைகளுடன் மற்ற ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு மாறுபட்டு சுதந்திரக் கல்வியுடன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

தனித்தன்மை…..

 இதற்கு ஒரு உதாரணம் பாருங்களேன்…  காலையில் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் வாயிலில் நின்று வருகிற குழந்தைச் செல்வங்களை ‘வணக்கம் வெற்றி உறுதி’ என நம்பிக்கை வாழ்த்துச் சொல்லி அன்போடு வரவேற்கும் உயரிய பண்பை உருவாக்கி வைத்துள்ளார்கள். இன்றைய நாகரீக உலகில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்திலும் good morning, hai போன்ற ஆங்கிலச் சொல்லே பயன்படுத்தப்படும் வேளையில் இந்தப்  பள்ளியிலோ ஆசிரியரும் மாணவரும் சந்திக்கும் முதல் சந்திப்பே வணக்கம்… வெற்றி உறுதி என்று கூறி தமிழோடு நம்பிக்கையையும் இளைய தலைமுறையினர் மனதில் சேர்த்தே விதைக்கிறார்கள்.

இதழ் கட்டுமானத்திலும், கருத்துக்களிலும் உயர்ந்த தரத்துடன் வெளி வந்துள்ளது. முதல் சில பக்கங்கள் மாணவர்களின் அழகிய ஓவியங்களாலும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளின் புகைப்படங்களாலும் நிறைந்துள்ளன.

பின்,

“கொன்று புதைத்தாலும்
கோடி முறை எரித்தாலும்
என்றும் அழியாது உயிர்த்தெழும்
தொல்காப்பியம் கொண்ட
நம்
இறவாத் தமிழ்!”

என மீண்டெழும் தமிழ் என்னும் தலைப்பிலான துருவன் பாலா கவிதைகள் நம்மை வரவேற்கிறது.

அதற்கடுத்தது எல்லாம் கவிதைகள், மிகச்சிறந்த ஆளுமைகளின் கட்டுரைகள், சிறு கதைகள் என கதம்ப மாலையாக இந்த கல்விச் சிறப்பு மலர் வெளிவந்துள்ளது.
இதில் தவறவே விடக்கூடாதது கட்டுரைகள்.. மிகச்சிறந்த ஆளுமைகளின் 25 க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகள்….

அதிலிருந்து சில துளிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு…

செந்தலை ந.கவுதமன்,

“ஒவ்வோர் இனமும் அதன் மொழியால் மட்டுமே அடையாளம் காணப்பெறுகின்றது. மொழிதான் நாட்டை உருவாக்குகிறது. நாட்டு உருவாக்கத்தில் மொழியின் பங்கு முதன்மையானது.”

முனைவர்.ச.சீ.ராசகோபாலன்,

பள்ளிகளில் இன்று தமிழ் தேயவும் மறையவும் அரசின் கொள்கைகளே காரணம்...  ஐயோ, தமிழ்த்தாயே , பாசத்துடன் நீ வளர்த்த மக்கள் உன்னை முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டனரே!!

ம.செந்தமிழன்,

முழுமையான அறிவு என்பது என்னவென்றால், எதையும் நீங்கள் நேரடியாகப் பார்த்தும், உணர்ந்தும் கற்றுக்கொள்வதுதான்.

பேரா.ச.மாடசாமி,

சமூகம் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒரு அநீதி என்றால் , சமூகம் வழங்கும் அடையாளங்கள் மற்றொரு விதமான அநீதி. வகுப்பறையும் இதற்கு விதிவிலக்கல்ல. வகுப்பறையிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. குழந்தைகளைப் புரிந்து கொள்வதிலும், அவர்களுக்கு அடையாளம் வழங்குவதிலும்..

மேலும் சுற்றுச்சூழல் பற்றிய கோவை சதாசிவம், நக்கீரன் அவர்களின் கட்டுரைகள்.. பின்லாந்து மற்றும் கியூப நாட்டு கல்வி முறைகளைப் பற்றிச் சிலாகிக்கும் கல்வியாளர் ஆயிஷா நடராஜன் கட்டுரைகள், பொதுப்பள்ளிகளின் அவசியம் பற்றிக்கூறும் இரா.எட்வின் அவர்களின் கட்டுரை, பறை பற்றிய மு.வளர்மதி அவர்களின் கட்டுரை என இம்மலரிலுள்ள அனைத்துக் கட்டுரைகளும்  மிகச் சிறப்பானவை.

மேலும் கல்வியினாலாய பயனென்கொல் என்னும் தலைப்பிலான கட்டுரையில் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா அவர்கள் ,

“காலம் காலமாக நாம் சொல்லி வந்த அனைத்து அறங்களின் மீதும் இயல்பாய் எழும் குழந்தைகளின் கேள்விகளில் இருந்தே புதிய உலகிற்கான அறம் பிறக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்து அவர்களைத் தள்ளி நின்று கவனிப்பதே நமது வேலையாக வேண்டும்” என்று புதியதோர் உலகம் படைத்திட வழிகாட்டுகிறார்.

ஏர் மகாராசன் அவர்களின் புதியக் கல்விக் கொள்கையில் மறைந்திருக்கும் பேராபத்துகள் என்னும் கட்டுரையில், “கல்வி என்பது அறிவையும் ஆற்றலையும் பண்பையும் அறத்தையும் ஆளுமையையும் உருவாக்கித் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். கல்வி பெறும் ஒரு மனிதர் அக்கல்வியால் இச்சமூகத்திற்கான பங்களிப்பைச் செய்பவராக மாற்றி அமைக்க வேண்டும்” என்ற கருத்து கல்வியின் ஆகச்சிறந்த பணியைக் குறிப்பிடுகிறது. மேலும் புதிய கல்விக்கொள்கையில் மறைந்திருக்கும் ஆபத்துக்களான சமஸ்கிருத மேலாக்கம், இட ஒதுக்கீட்டுமுறை நீக்கம், பெண் ஆசிரியர்கள் குறித்த குறைந்த மதிப்பீடு போன்றவை நமக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.
இன்னும் கண.குறிஞ்சி ,பொழிலன், புதுவைத் தமிழ்நெஞ்சன், பாஸ்கர் ஆறுமுகம், ச.மூர்த்தி ச.பிரபாகரன் , முனைவர் எம்.எஸ்.காந்தி மேரி, சிவ.கதிரவன், எஸ். அருள்  போன்ற அனைவரின் கட்டுரைகளோடு இம்மலரானது கருத்தியல் ரீதியாக  மிக உயர்ந்த தரத்துடன் வெளிவந்துள்ளது.

மலரில் உள்ள கவிதைகள் அனைத்தும் தமிழ் மொழியின் பெருமை பேசும் சொற்சித்திரங்கள்.

கடைசியாக பூங்கார், கவுணி என நூற்றுக்கும் மேற்பட்ட நமது பாரம்பரிய நெல் ரகங்களைத் தந்திருப்பது சிறப்பு!

கடைசி பக்கங்களில் பள்ளியின் பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழால்…… தமிழுக்காய்…. தமிழர்களால் நடத்தப்படும் திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியின் 132 பக்கங்களில் வெளிவந்துள்ள கல்விச்சிறப்பு மலர் மிகச் சிறப்பு! இதன் மதிப்பு நன்கொடையாக ரூபாய்.150/- என நிர்ணயித்துள்ளார்கள். இதற்கு மேலும் இதன் மதிப்பு மிக அதிகம். நான் முகநூல் வழியே கேட்டேன். முகவரி பெற்றுக்கொண்டு, பணம் கூட பெறாமல் அனுப்பி வைத்தனர். பிறகு மலரின் விலையான 150 உடன் கொரியர் செலவையும் சேர்த்து 200 பணவிடையாக அனுப்பினேன்.
நீங்களும் இம்மலரை வாங்கிப்படிப்பதால் உங்களுக்கும் பயனுண்டு, தாய்த்தமிழ் பள்ளிக்கும் பயன் உண்டு. நீங்கள் அளிக்கும் ரூபாய் பள்ளிக்கல்ல… தமிழுக்காக…
மலர் பெற தொடர்பு எண்:9843944044, 8903015571

நன்றி!
Ramamurthy

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One