எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கிராமங்களின் மேம்பாட்டுக்கு கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்த திட்டம்: மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்

Sunday, June 10, 2018


கிராமங்களின் மேம்பாட்டுக்கு கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கூறினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனையின்படி நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களுக்கு "சன்சத் ரத்னா' விருது கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு கூட்டத்தொடரில் பங்கேற்பது, கேள்விகள் எழுப்புவது, வருகை பதிவேடு உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும்.
பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், 'பிரிசென்ஸ்' என்ற இணையதள பத்திரிகை, சென்னை ஐஐடி ஆகியவை ஒருங்கிணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆண்டுக்கான சன்சத் ரத்னா 2018- விருது வழங்கும் விழா சென்னை ஐ.ஐ.டி.யில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சரும், "சன்சத் ரத்னா' விருதுக்குழு உறுப்பினருமான அர்ஜுன்ராம் மேக்வால் பேசியது: ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் தொகுக்கப்படும் புள்ளி விவரங்களின்படி விருதுகளுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கூட்டத்தொடரில் சரியாக செயல்படாத உறுப்பினர்கள், ஊடகங்களில் அதிகளவில் விமர்சிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மக்களின் பிரச்னைகள் பற்றி பேசிய உறுப்பினர்கள், புதிய திட்டங்களைச் செயல்படுத்த வலியுறுத்திய உறுப்பினர்களை ஊடகங்கள் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
கிராமங்களை மேம்படுத்த...நாடு முழுவதும் உள்ள கிராமங்களை மேம்படுத்த சிறப்பான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களை கிராமப்புறங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி கிராமங்களுக்கு வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று அங்கு நிலவும் குடிநீர்ப் பிரச்னை, வீட்டு வசதி, கல்வி அளித்தல் போன்றவற்றுக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களைப் பயன்படுத்தி எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்த ஆய்வுப் பணிகளையும், களப்பணிகளையும் மேற்கொள்வர்.
இந்தத் திட்டம் குறித்து சென்னை ஐஐடி வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து முன்னோட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன என்றார்.
விழாவில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்ட எம்.பி.-க்களுக்கான விருதுகளை வழங்கினர்.
யார், யாருக்கு விருது?: நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவின் தலைவர் எம்.வீரப்ப மொய்லி, பத்ருஹரி மஹதாப் (பிஜூ ஜனதா தளம், கட்டாக், ஒடிஸா), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாரமதி, மகாராஷ்டிரம்), ஸ்ரீரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல், மகாராஷ்டிரம்), ராஜீவ் சங்கர்ராவ் சதவ் (காங்கிரஸ், ஹிங்கோலி, மகாராஷ்டிரம்), தனஞ்ஜெய் பீம்ராவ் மஹாதிக் (தேசியவாத காங்கிரஸ், கோலாப்பூர், மகாராஷ்டிரம்), ஹீனா விஜயகுமார் காவித் (பாஜக, நந்துர்பார், மகாராஷ்டிரம்), சாந்தாராம் லட்சுமண் நாயக் (காங்கிரஸ், கோவா) ஆகியோருக்கு விருதுகள்
வழங்கப்பட்டன.
விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பிரைம் பாயின்ட் ஃபவுன்டேஷன் அமைப்பின் தலைவரும் பிரிசென்ஸ் இணைய இதழின் ஆசிரியருமான கே.சீனிவாசன், ஐஐடி மனிதவியல் துறை இணைப் பேராசிரியர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One