எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

"கற்கும் பாரதம்' திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா?

Monday, June 4, 2018

ஈரோடு: கடந்த மார்ச் 31 வரை நடைபெற்று வந்த மத்திய அரசின் கற்கும் பாரதம் (சாக்ஷர் பாரத்) திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.கல்வியறிவு இல்லாதோர் இல்லை என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் "கற்கும் பாரதம்' திட்டத்தை 2009-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார். குறிப்பாக கிராமப்புற மக்கள் கல்வி அறிவைப் பெறுவதுடன் தொழிலையும் கற்க வேண்டும் என்பதே இத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
 ஐம்பது சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட ஈரோடு, திருவண்ணாமலை, அரியலுôர், பெரம்பலுôர், தருமபுரி, சேலம், விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கடந்த 2009-இல் கற்கும் பாரதம் (சாக்ஷர் பாரத்) திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டம் மூலம் இதுவரை சுமார் 18 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த மாவட்டங்களில் ஊராட்சி அளவில் கற்கும் பாரதம் மையங்கள் அமைக்கப்பட்டன. பயிற்சி அளிப்பதற்காக மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் பயிற்சியாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டனர்.
 இவர்கள் மூலம், 15 வயது முதல் 35 வயதுடைய பெண்களுக்கு நடத்தப்படும் பயிற்சியில் அவர்கள் எழுதவும், எழுத்துக் கூட்டி வாசிக்கவும், வாக்கியங்களைச் சேர்த்து வாசிக்கக் கூடிய அளவுக்கு அடிப்படைக் கல்வியும் பெறுகின்றனர்.
 அடுத்தகட்டமாக இரண்டாவது நிலையில் 3 -ஆம் வகுப்புக்கு இணையாகவும் மூன்றாவது நிலையில் 5 -ஆம் வகுப்புக்கு இணையாகவும் கற்பித்து தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. மேலும், தொழிற் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்கான சான்றிதழ் மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில் வழங்கப்படுகிறது.
 கற்கும் பாரதம் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 2.50 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி மற்றும் சமநிலைக் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்றவர்களில் 5 ஆயிரம் பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கிரேடு-1, கிரேடு-2 ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத் திட்டத்தில் தொழில் முறைப் படிப்புகளாக மெழுகுவர்த்தி, ஊதுவத்தி, சாம்பிராணி தயாரிப்பு, தையல் கலை, ஓவியம் உள்பட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.
 எவ்விதமான கல்வி அறிவு பெற வாய்ப்பு இல்லாதவர்களும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மலை வாழ்ப் பகுதியைச் சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தின் மூலம் கல்வியறிவும், தொழில் பயிற்சியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை பரிந்துரைப்படி, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான பெண்கள் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற உதவி வந்த இத்திட்டம் கடந்த மார்ச்31 -ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 இது குறித்து கல்வியாளர் விஸ்வநாதன் கூறியதாவது:
 கற்கும் பாரதம் திட்டம் எழுத்தறிவில்லாத அடித்தட்டு கிராம மக்களுக்கு நல்ல பயனளித்துள்ள நிலையில், இத் திட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சாமானியர்களுக்கும் கல்வி, தொழிலில் விழிப்புணர்வை உருவாக்கக் கூடிய இது போன்ற திட்டங்களை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
 இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி கூறியதாவது:
 மத்திய அரசு திடீரென இத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. வேறு பெயரில் இத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தில், கல்வி அறிவு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாகும். இத் திட்டம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாக உறுதியான தகவல் இல்லை. தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகவே தெரிகிறது. விரைவில் வேறு வடிவத்தில் கூடுதல் பயன்களுடன், வரும் கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 கல்லாதார் இல்லை இம்மாநிலத்தில் என்ற நிலை ஏற்பட, "கற்கும் பாரதம்' திட்டத்தை மத்திய அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதே அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மத்திய அரசு இதை நிறைவேற்றுமா?
 - ஆர். மோகன்ராம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One