எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

`நான் சுடிதாருக்கு மாறிட்டேன்!' காரணம் சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியை

Thursday, July 5, 2018


பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சீருடை அணிந்து வரச்சொல்வது, அவர்களின் மனங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் இருக்கச் செய்யும் ஓர் ஏற்பாடே. ஆசிரியர்களுக்குச் சீருடை இல்லாவிட்டாலும், புடவை அணிந்துவரவே அறிவுறுத்தப்படுகிறார்கள். சில பள்ளிகளில் புடவைக்கு மேலே ஓவர்கோட் அணிந்துவரச் சொல்கின்றனர். ஆனால், கற்பித்தலுக்கு லகுவான ஆடையாகப் புடவை இருப்பதில்லை என்பது பல ஆசிரியைகளின் கருத்து.

ஆசிரியைக்கான உடை குறித்து திருவண்ணாமலை ஜவ்வாது மலை அரசுத் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மகாலட்சுமி, தம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். பாடங்களைக் கற்பித்தலோடு தம் பணியை நிறுத்திக்கொள்ளாமல், அவர்களின் உடல் மற்றும் மனநிலை  குறித்து அக்கறையோடு செயல்படுபவர் மகாலட்சுமி. சமீபத்தில், பள்ளியின் மேற்கூரை அமைக்கும் பணிக்கு நண்பர்களின் உதவியைக் கோரியதோடு, தம் பங்களிப்பாக 50,000 ரூபாயையும் அளித்துள்ளார்.

``என் பள்ளிக் குழந்தைகள், `சார் (ஆண் ஆசிரியர்) எல்லாம் வேட்டியாக் கட்டிட்டு வாராங்க. நீங்க மட்டும் ஏன் டீச்சர் சேலையே கட்டிட்டு வாரீங்க' எனக் கேட்டார்கள். ஏனென்றால், அவர்கள் குதிக்கச் சொன்னால் குதிக்கணும். ஆடச் சொன்னால் ஆடணும், ஓடியாடி விளையாடச் சொன்னால், விளையாடணும். இதற்கெல்லாம் இந்த டிரஸ் சரி வராது இல்லையா? ஆரம்பத்தில் ஆண் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக்கொண்டுதானே பணிக்கு வந்தார்கள். காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களால் பேன்டுக்கு மாறினார்கள் அல்லவா. அதே பிரச்னை பெண்களுக்கும் இருக்கும் அல்லவா?'' எனக் கேட்கிறார்.
Click

``அரசுப் பணியை எடுத்துக்கொண்டால், மாவட்ட ஆட்சியர் உள்பட பல பதவிகளில் இருக்கும் பெண்களும் தங்களுக்குச் செளகரியமான சுடிதார் உடைகளை அணிவதைப் பார்க்க முடிகிறது. உடை என்பது உடலை மறைப்பதற்காகத்தானே? திரைப்படங்களில் பெண் ஆசிரியர்களின் அங்கங்களை, மாணவர்கள் முதல் சக ஊழியர்கள் வரை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் காட்டுகிறார்கள். இது நடைமுறையிலும் இருக்கத்தானே செய்கிறது. அண்டை மாநிலமான கேரளாவின் மேல்நிலைப் பள்ளிகளில், ஆசிரியைகள் ஓவர்கோட் அணிந்துவருவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். இதற்கான காரணம் மேற்சொன்ன விஷயம்தான். இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் உடை குறித்து, அதிகமாக ஆசிரியர் தரப்பிலிருந்து பேசப்படுகிறது. இது குழந்தைகளின் காதில் விழும்போது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவற்றையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் ரோல்மாடல் ஆசிரியர்கள்தானே. இறுதியாக, எனக்கான ஊதியத்தை அளிக்கும் முதலாளிகளான எம் மாணவர்களின் விருப்பப்படியே நான் சுடிதார் அணிந்துகொண்டேன் அவ்வளவுதான்" என்கிறார் முத்தாய்ப்பாக.

ஆசிரியைகளுக்கான உடை குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. பண்பாடு என்ற பெயரில் புடவையைத் தவிர வேறு உடைகளை அணியக் கூடாது என்ற வாதம் ஒரு பக்கம் உள்ளது. நடைமுறையில் புடவை அணிவதில் உள்ள சிக்கல்களை ஆசிரியைகள் கூறுகின்றனர். அதிலும், தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு ஆடிப் பாடி கற்பிக்க புடவை மிகப்பெரிய தடையாக உள்ளது. மேல்நிலை வகுப்புகள் எனும்போது சங்கடமின்றி, தன் உடை குறித்த தயக்கமின்றிப் பாடம் நடத்த சுடிதார் போன்ற ஆடைகளே பொருத்தமானவை  என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்னையை வெறும் ஆடை தொடர்பானதாக மட்டுமே பார்க்காமல், கற்பித்தல் பகுதியின் முக்கியமான ஒன்றாகப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வையில் சரியாக உரையாடத் தொடங்கினால், இதற்கான தீர்வை எட்டலாம். முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் அதற்கு முன்வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

8 comments

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One