எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Tuesday, August 7, 2018

ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு:
நான் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்று, பி.எட். முடித்து 2013-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 92 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றேன். இந்நிலையில் 2014-இல் பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண். 71-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தகுதி 7 ஆண்டுகள் தான் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. 2018 வரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளில் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால் நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றது செல்லாமல் போய்விடும்.
இதற்கிடையே கடந்த ஜூலை 2-இல் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எண்.149-இல், இனிவரும் காலங்களில் ஆசிரியர் பணி நியமனம் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. அதற்குப் பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் ஆசிரியர் பணி வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றிருந்தாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்ற அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு முறை தகுதி பெற்றால் 7 ஆண்டுகள் தான் செல்லுபடியாகும் என்ற நிலையை மாற்றி ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One