சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 2017-18ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,மார்ச் 16 தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில் 4,81,371 பேர் மாணவிகள், 4,83,120 பேர் மாணவர்கள், மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர். அதே போல், தனித்தேர்வர்களாக 11,098 பெண்கள், 25,546 ஆண்கள், 5 திருநங்கைகள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26,043 மாணவிகள் மற்றும் 24,713 மாணவர்கள் என 50,756 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மாணவிகள் 8,694 பேர், மாணவர்கள் 8,820 பேர் என மொத்தம் 17,514 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் மாணவர்கள் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 186 பேர் தேர்வு எழுத 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 3,659 மாற்றுத்திறனாளிகளில் 1,898 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படுகிறது. 1,067 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment