கடந்த ஞாயிற்றுக் கிழமை (3.03.18) தந்த நம் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவின் (A3) செய்தி தமிழகத்தின் பல மாவட்டங்களையும் எட்டி, ஏழாவது நாளில் (10.03.18) சனிக்கிழமை அன்று சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதி சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளியில் காலை 10 மணி அளவில் ஏறத்தாழ 65 ஆசிரியர்களும் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் என 85 பேர் ஒன்று கூட கலைப் பயண விழா பெரும் ஆரவாரத்துடன் தொடங்கியது.
சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி சாரண மாணவர்கள் அனைவரும் ஒவ்வொருவரையும் முன்னின்று வரவேற்று .....
சென்னை ,திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , விழுப்புரம் , சேலம் ,நாமக்கல் திருவண்ணாமலை ,சிவகங்கை , கிருஷ்ணகிரி , வேலூர், திருச்சி ஆகிய 12 மாவட்டங்களிலிருந்தும் ஆர்வமுடன் ஆசிரியர் தோழமைகள் கலந்து கொள்ள , வாழ்க்கை என்ற தன்னார்வலர் குழு நண்பர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை வரவேற்பு ,வருகைப் பதிவு, மதிய உணவு , புகைப்பட , காணொலி ஆவணம் என எல்லா வகையிலும் ஏற்பாடு செய்திருக்க ,
முனைவர் காளீஸ்வரன் ஐயாவும் அவரது மாற்று ஊடகத் துறை (AMC) நண்பர்களும் இந்த நாளை வெகு நேர்த்தியாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயமாலா அவர்களின் வரவேற்பினை அடுத்து , கலைக்குழுவை அறிமுகம் செய்து ஆசிரியர்களை வரவேற்ற வாழ்க்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜய் அவர்களின் சில வார்த்தைகளைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சுய அறிமுகத்திற்குப் பிறகு A3 குழு ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி அவர்களின் சிறு ஆரம்ப உரையும் அமைய ,
கலைக்குழுவின் மூத்த சகோதரி விண்ணரசி அவர்கள் காளீஸ்வரன் ஐயாவின் கடந்த 25 ஆண்டு கால நாட்டுப்புறக் கலைகளின் செல்பாடுகளையும் தமிழகமெங்குமுள்ள ஆர்வமுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை காளீஸ்வரன் ஐயா அவர்கள் உருவாக்கிய விதம் பற்றியும் மிக சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டு , அங்கு வந்திருந்த கலைக்குழுவில் உள்ள ஒவ்வொரு பயிற்சியாளர்கள் பற்றியும் அறிமுகம் செய்து வைத்த பிறகு ,
வந்திருந்த ஆசிரியர்களை குழுக்களாகப் பிரித்து முறையே பறை ,கழியல் , ஒயிலாட்டம் ,கோலாட்டம் சாட்டைக் குச்சி ஆகிய 5 பயிற்சிகளை இரண்டு மணி நேரம் பயிற்றுவித்தனர். வயது மறந்து தாங்கள் இரவு முழுவதும் பிரயாணம் செய்து வந்த களைப்பு மறந்து, முழுமையான ஈடுபாட்டுடன் சிறு குழந்தைகள் போலக் கற்றுக் கொண்டது மிக ஆச்சர்யமான ஒரு விஷயம்.
ஒயிலாட்டத்தில் முதல் 8 அடவுகளை பயிற்சியாளர் விண்ணரசி இரண்டாவது குழுவிற்குக் கற்றுத் தந்தார். அது போலவே மற்ற ஐந்து பிரிவுகளிலும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட நேரம் சென்றதே தெரியாமல் மதிய உணவு இடைவேளை வந்து விட அனைவருக்கும் பள்ளியிலேயே சத்துணவு பிரிவு சேர்ந்த உணவு தயாரிப்பவர்கள் அறுசுவை உணவுத் தயாரித்திருக்க , வாழ்க்கைக் குழுவின் தன்னார்வலர்கள் வழங்கிட தொடர்ந்து மதிய வகுப்பு ஆரம்பித்தது.
முனைவர் காளீஸ்வரன் ஐயா அவர்கள் செறிவு மிக்க சமுதாயத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களோடு கலந்துரையாடத் துவங்கினார். இந்த சமூகத்தின் காதுகளுக்கு இரண்டு குரல்கள் மட்டுமே சென்றடையும் ஒன்று கலைஞனின் குரல் , மற்றொன்று ஆசிரியரின் குரல் என மேற்கோள் காட்டி , ஒடுக்கப்பட்டவரின் விடுதலைக்கான கல்வி என்ற நூலாசிரியரும் மிகச் சிறந்த கல்வியாளருமான பவுலோ ப்ரேயர் (Paulo Freire) நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிக் கூறிய கருத்துகளை நமது சிந்தனைகளில் கொண்டு வந்தார்.
கலைகளின் தோற்றுவாய் பற்றியும் 1024 கலைகளில் இன்று வெறும் 15 மட்டுமே உயிரோடு உலவி வருகின்றன எனக் கூறி , தனது முனைவர் பட்டம் நாட்டுப்புறக் கலைகள் சம்மந்தப்பட்டது எனவும் பகிர்ந்த ஐயா ,நாட்டுப்புறக் கலைகளின் பிறப்பிடமே கிராமமும் விவசாயியும் தான் என்ற ஆதாரமான கருத்தை முன் வைத்து , நாற்று நடும் போது இரண்டு நாற்றுக்கு இடைப்பட்ட அளவுகளைக் கணக்குப் பாடம் படிக்காமல் சொல்லி வைத்தவன் நம் முப்பாட்டன் விவசாயி ,பாட்டுகள் வழியே பலவற்றையும் கற்பித்து வாழ்ந்தவன் விவசாயி , என்று பல சொந்த அனுபவங்களை முன்வைத்து ஆசிரியர்களை சிந்திக்க வைத்தார்.
பாரதி எழுதிய செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடலுக்கான தாளம் .....நம் விவசாயியின் தாளம் , அவன் தந்த அடவுகளில் தான் பல திரைப்படப் பாடல் மெட்டுகளும் அவனிடமிருந்து தான் எடுக்கப்பட்டன எனவும் உதாரணங்களுடன் பகிர்ந்தார்.
இன்று தமிழகத்தின் மிகப் பிரபலமான இந்திய அமைச்சுப் பணியில் இருக்கும் IAS அதிகாரிகள்கரகம் தலையில் வைத்து ஆடவும் , சாட்டைக் குச்சி சுழற்றவும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களே , இது போன்ற பயிற்சிகள் மூளை செல்களை சுறுசுறுப்பாக்கி பணிகளுக்கு ஏதுவாக முடுக்கி விடும் இயல்பைப் பெற நம்மைத் தூண்டும் என்கிறார்.
எண்களின் பெயர்களில் 50, 100 , 150 ,200 என்று 4 பங்கேற்பாளரை நிற்க வைத்து தொடர்ச்சியாக இந்த எண்களின் பெயர்களில் அவர்களிடம் பல வினாக்கள் எழுப்பி ஒரு விளையாட்டை அமைத்தார். இது ஒட்டுமொத்த வகுப்பையும் கவனஈர்ப்புக்கு உட்படுத்துவதான ஒரு அணுகுமுறையாகவும் தனி மாணவர் எண்களை தானாகவே மனதில் பதியும்படியுமாக இருந்தது பணியாரம் ,இட்லி , கேசரி என அவர்களுக்குப் பிடித்த பலகாரங்களின் பெயர்களில் ஆசிரியர்களை பங்கேற்க வைத்து ஒரு சிறு விளையாட்டு அமைத்தார்.
நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் என 4 ஆசிரியர்களை முன்னிறுத்தி , அவர்கள் சொன்ன பதிலைத் திரும்ப திரும்பக் கூறும்படி வேறு வேறு கேள்விகள் கேட்டு ஒரு விளையாட்டு அமைத்தார். இது ஒரு பாடத்தை மனப்பாடம் செய்யும் வழிமுறைக்கான அணுகுமுறையாக இருந்தது , மேற்கண்ட விளையாட்டுகள் கற்றலில் ஈடுபடுகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலேயே மாணவர் கற்றுக் கொள்ள ஏதுவான முறைகளாக இருப்பது அற்புதம் .
ஆடல் , பாடல் வழிகளில் வகுப்பறைக் கற்பித்தல் எவ்வளவு இனிமையோ அத்துனை எளிமை என்பதைக் காட்ட அவர் பாடி ஆட அதைப் போலச் செய்யும் மாணவராக ஆசிரியர்கள் பிரதிபலித்தனர் மரங்கள் பற்றிய ஒரு பாடலின் வழியே ...
ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் Ten (10) der முறையில் ... அணுகினால் எல்லா மாணவரையும் வெற்றியடைய வைக்க முடியும் என்பதை மிக அழகாக, பத்து விரல்களைக் கொண்டு மிகப் பெரிய அணுகுமுறையைக் கையாள வழிகாட்டினர்.
அதோடு லாவணி ,சொலவடை இவற்றின் வழியே மக்கள் வார்த்தைகளை , வாக்கியங்களை , பொருளோடு வெளிப்படுத்தும் திறனை தாங்களாகவே கற்றுக் கொண்ட சமூகம் நம்முடைய மரபுவழிச் சமூகம் இன்று மறைந்து அருகிவிட்டது என்றார். சில ஆசிரியர்கள் அந்த சொற்கள் தங்களுக்குப் புரியவில்லை என்றனர். இங்கு நாம் யோசிக்க வேண்டும். இது போன்று ஓரளவு எல்லாம் அறிந்திருக்க வேண்டிய ஆசிரியருக்கும் தெரியவில்லை என்றால் நமது கல்வி முறையும் அரசும் சமூகமும் நமது கலைகளை மறந்ததே , அறிய வேண்டிய வழிமுறைகளை அடைத்து வைத்ததே காரணம் எனலாம் .
இருவர் தொடர்ந்து வினாக்கள் கேட்டு விவாதம் செய்வது போல அமையும் கலை தான் லாவணி எனவும் , ஒரு பொருளை உணர்த்த மறை பொருளாகப் பேசப்படும் வாக்கியங்கள் , எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பழமொழி வழிக் கூறலே சொலவடை என உதாரணங்கள் வழியே நமது ஆசிரிய சமூகத்திற்கு எடுத்தியம்பினார் ..
தொடர்ந்து வாசிப்பின் வகைகளாக 1 - 5 வகுப்புக்கு உரத்த வாசிப்பும் , 6-8 வகுப்புக்கு கூட்டு வாசிப்பும் , 9-12 வகுப்புகளுக்கு காட்சி வாசிப்பும் , கல்லூரி மாணவருக்கு அமைதி வாசிப்பும் என வெகு அற்புதமாக வாசிப்பின் தேவையையும் வகைகளையும் சில உதாரணங்களுடன் ஆசிரியர்களுடன் பகிர்ந்தார். அமைதி வாசிப்பிற்குப் பிறகு தான் , கல்லூரி காலமும் அதற்குப் பிறகும் உள்ள நிலைகளில் தான் வாசித்ததை உள்வாங்கி ஆழ்ந்து கவனிக்கவும் , சிந்திக்கவும் ஆரம்பிக்கின்றனர் என்ற மிக மிக இன்றியமையாத கருத்தை நம் முன்னே வைத்தார்.
தனக்கு உரத்த வாசிப்பை அறிமுகப்படுத்தியவர் தனது வீட்டுத் திண்ணையில் அமரும் ஒரு கல்வி பெறாத தாத்தா எனவும் , அவரே சிறிது சிறிதாக வாசிக்கப் பழகி பழகி இராமாயணத்தை உரத்து வாசிக்கக் கற்று அதைப் பயிற்சி செய்ததால் எல்லோராலும் கேட்க முடியும் என்ற உண்மையை தனக்குப் புரிய வைத்தவர் என தனது இளமைக் காலத்தை நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டுப்புறக் கலைகள் வழியாக வாசிப்பிற்கான ஒரு தளத்தை சத்தமில்லாமல் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அரசுப் பள்ளிகளுடன் தனது குழுவுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
AMC மாற்று ஊடக நிறுவனம் வழியாக மக்கள் வீதி என்ற மாத இதழ் நடத்தப்படுவதும் வருடம் ஒரு முறை நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வீதி விருது விழா தனது சொந்த முயற்சியால் செய்து வருவதும் பகிர்ந்தார். மேலும் எந்த மாவட்டமாக இருந்தாலும் அங்கு தனது கலைக் குழுவை அறிமுகம் செய்து பயிற்சி தர ஏற்பாடு செய்வதாகக் கூறி , தன்னிடம் இருக்கும் அனைத்து நாட்டுப்புறக் கலை தொடர்பான வளங்களையும் ஆசிரியர்கள் பயன்படுத்தி நம் எதிர்கால சந்ததிக்காக இக் கலைகளை மீட்டெடுக்க உங்களால் தான் முடியும் எனக் கேட்டுக் கொண்டார்.
அவரது வகுப்பு.... தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும் அசைவு பெறும் நடனமாக ஒரு மிக நல்ல பாடலுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து இந்த சிறப்பு நிகழ்ச்சிக்குத் துணை நின்ற அத்துணை நல் மனிதர்களுக்கும் நன்றி தெரிவித்து இதன் அடுத்த நிலைகளைத் திட்டமிடவும் , பள்ளி வளாகத்தில் குழந்தைகள் இயல்பாகவே பெற்றிருக்கும் இது போன்ற மரபுக் கலைகளை உணராமல் தொழில் நுட்ப வகுப்பறை என தொடுதிரைப் பெட்டிகளை அவர்களிடத்தில் கொண்டு சேர்க்கத் திட்டமிடும் இன்றைய கல்வி முறைகளில் மாற்றம் பெற இது போன்ற நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டு சேர்க்க உறுதி கொள்ள ஆசிரியர்களிடம் வேண்டுதல் வைத்தும் பகிர்ந்து கொண்டார் ஆசிரியரும் A3 ஒருங்கிணைப்பாளருமான உமாமகேஸ்வரி.
தொடர்ந்து வாழ்க்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜய் தனது இந்த ஒரு நாள் பயிற்சியின் சிந்தனை உருவாக்கம் 8 மாதம் முன்பே வந்ததாகவும் தற்போது வாழ்க்கைக் குழு உறுப்பினர்கள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு தந்ததாகவும் பகிர்ந்தார்.
தலைமையாசிரியரும் நன்றி பாராட்ட
இறுதியாக தனது மாற்று ஊடக நிறுவனத்தின் வழியாக அனைவருக்கும் இந்த ஒரு நாள் பயிற்சிக்கு அவரது கரங்களால் சான்றிதழ்கள் வழங்கி , புகைப்படம் எடுக்க இந்த நாள் எல்லோருக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.
காஞ்சிபுர மாவட்டத்திலிருந்து கண் பார்வையற்ற ஆசிரியர் பரத் கலந்து கொண்டது மிகச் சிறப்பு
சிறப்பு நன்றிகள் பாடசாலை Madhan Mohan கல்வி கல்விச்சிறகுகள் கார்த்திகேயன், கல்வி செய்திகள் Saravanan
பயணம் தொடரும்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment