சென்னை: தமிழகத்தில் மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்துவது தொடர்பாக இங்கிலாந்து நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: சுற்றுப்புற மாசுபாட்டை குறைக்கும் வகையிலான மின்சார பேருந்துகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் பொருட்டு, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சி-40 என்ற முகமைக்கும், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சாலை வரைபடம் தயாரித்தல், உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், தூய்மையான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கு சி-40 முகமை உதவி செய்யும் நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தாணுலிங்கம், சி-40 முகமை துணை செயல் இயக்குநர் கேவின் ஆஸ்டின், கிளீன் எனர்ஜி இயக்குநர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறை: போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளர் டேவிதார் கூறுகையில், ‘சி-40 அமைப்பினர் உலகம் முழுவதும் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மின்சார பஸ்கள் இயக்குமாறு பல நாடுகளை வலியுறுத்தி வருகின்றனர். அந்த அமைப்பில் 92 நாடுகள் இணைந்து மின்சார பஸ் சேவை வழங்கி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிடம் அந்த முகமை அதிகாரிகள் பேசினர். முதல் முறையாக தமிழகம்தான் இந்த முகமையில் இணைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் மின்சார பஸ்களாக படிப்படியாக மாற்றப்படும்’ என்றார்

No comments:
Post a Comment