எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

3 ஆண்டுகளில் 100 ஜோடி கண்கள் தானம் : குடியாத்தம் இளைஞரின் தன்னலமற்ற சாதனை

Sunday, April 8, 2018


குடியாத்தம்:மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கண்களை தானமாக பெற்று மருத்துவமனைகளுக்கு வழங்கி, 600க்கும் மேற்பட்டோருக்கு உலகை பார்க்கும் வாய்ப்பை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் கவரை தெருவை சேர்ந்தவர் எம்.கோபிநாத்(39) என்பவர்தான் அந்த பெருமைக்குரியவர். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் செயல்பட்டு வரும் இவர் இம்மாதம் 21ம் தேதி வரை 102 பேரின் கண்களை தானமாக பெற்று, வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளார். இதுதவிர, இறந்தவர்கள் 25க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை தானமாக பெற்று வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆந்திர மாநிலம் குப்பம் பிஇஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளார்.

மூளைச்சாவு அடைந்த 3 பேரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர் தானமாக பெற்ற கண்கள் மூலம் 600க்கும் மேற்பட்டோருக்கு பார்வை கிடைத்துள்ளது. மருத்துவக்கல்லூரிகளுக்கு உடல்களை தானமாக பெற்று வழங்கியதன் மூலம் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக்கும் உதவியுள்ளார். உடல் உறுப்புகள் தானம் வாயிலாக, கல்லீரம், கணையம், இருதயம், மண்ணீரல் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை தானமாக பெற்று வழங்கப்பட்டதன் மூலம் 25க்கும் மேற்பட்டவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். எந்தவித விளம்பரமும் இன்றி கடந்த 3 ஆண்டுகளில் தனியொருவராக இந்த சாதனைகளை செய்ததுடன், தனது சேவையை தொடர்ந்து வரும் எம்.கோபிநாத் இதுபற்றி கூறியதாவது:

கண் பார்வையின்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து வருகின்றனர். இறந்த சில மணி நேரத்தில் கண்களை தானமாக பெற்றுவிட்டால், ஒரு ஜோடி கண்களால் 2 முதல் 8 பேர் வரை கண் பார்வை கிடைக்கும் நிலை. ஆனால் குறித்த நேரத்தில் கண்களை எடுக்கா விட்டால் அந்த கண்கள் வீணாகும். மண்ணோடு மக்கும். நெருப்பில் எரிந்து போகும். ஆகவே பலரின் வாழ்க்கையை ஒளியேற்றும் வகையில், கண் பார்வையை பெற்று தர வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதால் ரோட்டரி சங்கத்தில் இணைந்தேன். இதில் இணைந்ததும் கண்கள் மற்றும் உடல் உறுப்பு தானம் தொடர்பான ஆர்வம் அதிகரித்தது. கண்தானம் பெறும் பணியில் தீவிரமாக இறங்கினேன்.
24 மணி நேரமும் எனது செல்போனை ஆன் செய்து வைத்திருப்பேன். நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரமும் போன் அழைப்பு வரும். நண்பர்கள், பொதுமக்கள்  போன் செய்வார்கள்.

இறப்பு செய்தியை கேட்பேன். உடனே அங்கு சென்று துக்கத்துடன் இருக்கும் உறவினர்களிடம் பேசி கண்தானம் குறித்து பேசுவேன். உடனுக்குடன் கண் மருத்துவமனைக்கு பேசி மருத்துவர்களை வரவழைப்பேன். மேலை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் பணி நிமித்தமாக சில முறை சென்றுள்ளேன். அங்கு இருந்தபோது கூட நண்பர்கள், பொதுமக்கள் செல்போனில் தகவல் தெரிவிப்பர். ஆனால் அவர்களிடம் நான் வெளிநாட்டில் இருக்கும் தகவலை கூட தெரிவித்ததில்லை. கண் மருத்துவமனைகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி கண் தானத்தை பெற்றுள்ளேன். இதேபோல் தொழில் நிமித்தமாக வட மாநிலங்களுக்கு சென்று இருந்த போதும் கண்தானம் பெற்றுள்ளேன்.

கண்தானம் பெற்று தருவதில் எனக்கு மனதில் முழு ஆத்ம திருப்தி உள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் கூட தானம் அளித்தவுடன் அடுத்த சில நாள்களில் மன நிறைவோடு பேசும்போது கண்களில் கண்ணீர் வரவழைக்கும். இறந்தவர்களின் கண்களை தானம் அளித்தவுடன் அவர்களது உறவினர்கள் துக்கத்திலும் மன நிறைவோடு கண்களில் கவலை தோய்ந்த கண்ணீருடன் நன்றி சொல்லும்போது ஒருவித நெகிழ்ச்சி மனதை சூழும்.
இலங்கையில் இறந்தவர்கள் கண் தானம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கண் பார்வை இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உள்ளது. கண் வங்கிகளில் கண்கள் எப்போதும் இலங்கை நாட்டில் இருக்கும். அதுபோன்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும். இதுதவிர, இதுவரை 10 முறை ரத்த தானம் செய்துள்ளேன். மேலும் ரத்த தான முகாம்கள் வாயிலாக 200க்கும் மேற்பட்டோரிடம் ரத்த தானம் பெற்று ரத்த வங்கிகளுக்கு அளித்துள்ளேன். மருத்துவ சேவையை மேற்கொள்வதில் மனதில் ஆத்ம திருப்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One