எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று உலக புத்தக தினம்!!!

Monday, April 23, 2018


இன்று உலக புத்தக தினம்!!!

மனதின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை உரக்கச் சொல்லவைக்கும் பேராற்றல் மிக்கவை புத்தகங்கள். படிக்கும்போது மனதுக்குள் பூப்பூப்பதும், பூகம்பம் தோன்றுவதுமான மாயத்தை நிகழ்த்தும் புத்தகங்கள் மனசாட்சியின் ஆன்மவிலாசம். அங்கே யாரும் தவறுதலாய் திரித்துக் கூறமுடியாது. மனது மட்டும் பார்க்கும்… கேட்கும்… அனுபவித்து பரவசப்படும்… அந்த நுட்பமான அறிவு, எழுத்துக்களின் வழியே சிந்தனைகளை தட்டியெழுப்பி நம்மை யாரென்று உலகிற்கு காட்டும். இன்று (ஏப்.,23) உலக புத்தக தினம். படித்த புத்தகத்தையும், எழுதிய புத்தகத்தை பற்றியும் விமர்சிக்கின்றனர், எழுத்தாளர்கழும் கல்வியாளர்களும்

வாழ்க்கையின் அழகிய துணைவன்

எழுத்தாளர் வின்சென்ட், மதுரை

ஒரு புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் புத்தகங்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதை
புரிந்து கொள்ள வேண்டும். அவை தனிமனித வாழ்க்கையை, உலகையே மாற்றுகின்றன. நம் வாழ்க்கை பயணத்தில் மிகச்சிறந்த துணைவனாக கூடவே வருகின்றன.

எப்படி படிக்க வேண்டும் என நிறைய பேருக்கு தெரியவில்லை. பொழுதுபோக்குக்காக, பிரச்னையை கண்டறிவதற்காக, தீர்வைத் தேடுவதற்காக படிக்க வேண்டும். இளைஞர்கள் இணையதளத்தில் இருப்பதை படித்து உள்வாங்கி அதைநோக்கி பயணிக்கவேண்டும். தத்துவ நுாலாக
இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும் முழுமையாக படிக்க வேண்டும். புத்தகங்களை எப்படி அணுகவேண்டும், படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

அலை குடிபோக சிறுவீடு

கவிஞர் நந்தலாலா, திருச்சி

பெருமரங்களுக்கு அடியில் விதை இருப்பதைப் போல, சமுதாயத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விதையாக இருப்பது புத்தகங்கள்தான். உருண்டை வடிவ உலகமாக இருந்தாலும், செவ்வக வடிவ புத்தகங்களின் வழியே நாம் அதைப்பார்க்கிறோம். அவை தான் மனிதனை செதுக்குகின்றன. ஒரு கவிஞர் எழுதிய புத்தகத்தின் கவிதை என்னை ஈர்த்தது. கடற்கரையில் அமர்ந்து மணலால் ஒரு குழந்தை வீடு கட்டுகிறாள்.

எப்போது குடிபோகலாம் என்று குழந்தையிடம் அப்பா கேட்கிறார். 'நாம் குடி போவதற்கு அல்ல. கடல் குடி வருவதற்கான வீடு' என்று குழந்தை சொல்வதாக கவிஞன் முடிக்கிறான். என்ன ஒரு நேர்மறையான பார்வை. அலையடிக்கும் இடத்தில் வீடு கட்டினால் அலை வீட்டை அழித்துவிடும் என்று சொல்கிறோம். இல்லை, அலை குடிவருகிறது என, மடைமாற்றம் செய்து, வாழ்க்கையை அழகுமிக்கதாக மாற்றுவது புத்தகங்கள் தான். ஒரு மனிதன் புத்தகங்கள் படிப்பதற்காக மட்டும் தலைகுனியலாம். அதிகமாக தலைகுனிந்து படிக்கும் மனிதனின் தலை எதிர்காலத்தில் நிமிர்ந்து நிற்கும்.

கல்கியின் கறுப்பு வெள்ளை

எழுத்தாளர் வரலொட்டிரெங்கசாமி


கல்கியின் பொன்னியின்செல்வன் புத்தகத்தை, ஆறாண்டு முயற்சிக்கு பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.அதன்பின் என்னுடைய எழுத்துநடை, கதை அமைப்பு, பாத்திரங்கள் அமைப்பு கூட வரவேற்கத்தக்க விதத்தில் மாறியிருப்பதாக வாசகர்கள் சொல்லும் போது அந்த பெருமை கல்கிக்கு தான் என, மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். அவரது பாத்திரப்படைப்பில் ஒரு விசேஷம் இருக்கிறது.கறுப்பு என்றும் வெள்ளை என்றும் முத்திரை குத்தி கதாநாயகன் என்றும், வில்லன் என்றும் பிரித்து காட்டவில்லை.

நாம் சந்திக்கும் மனிதர்களை நல்லவர்கள் என்றும், தீயவர்கள் என்றும்என வரவேற்று ஒதுக்குவது கூடாது என்று சொல்லியிருப்பார். அவரது கதையின் கதாபாத்திரங்களின் பட்டியல் 15 பக்கங்களுக்கு நீளும். ஆனாலும் சிறிய பாத்திரங்கள் கூட கதையை நகர்த்துவதாக காண்பித்திருப்பார். நாம் ஆயிரக்கணக்கான மானிதர்களை சந்திக்கிறோம். அவர்கள் நம் வாழ்க்கையை முன்நகர்த்த ஏதோ ஒரு விதத்தில் உதவுகின்றனர். இதை புரிந்து கொண்டால் மற்றவர்களுடான நம் உறவு மேம்படும்.

நீங்கள் மனம் லயித்து படிக்கும் புத்தகங்கள் உங்களுக்குள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்களை புரட்டிப் போட்டு விடும் புத்தகம் ஒருநாள் கிடைக்கும். அந்தநேரம் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும். அதற்கொரு நிபந்தனை. அதை தேட வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தபுத்தகத்தில் எந்த பேருண்மை வந்து உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுமோ … யாராலும் சொல்ல முடியாது. தினமும் பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்போம்.

உருமாற்றும் ஆயுதம்

மலர்வதி, எழுத்தாளர், கன்னியாகுமரி 

சமூகத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. நிறைய பேர் பார்க்கிறோம்; பார்க்காமல் போகிறோம். ஒரு படைப்பாளியின் பார்வையில் அது சமூகத்திற்கான அர்ப்பணிப்பாக இருக்கும்.
சமூகத்தின் உள் ஆழமாக பார்த்து அதில் கிடைத்த அனுபவங்களை துாப்புக்காரி, காட்டுக் குட்டி நாவல்களாக எழுத ஆரம்பித்தேன். சமூகத்தில் அழுக்காக்குபவர்களை மேல்மட்டமாகவும், சுத்தம் செய்பவர்களை கீழ்மட்டமாகவும் பார்க்கிறோம் என்ற மனோபாவத்தை துாப்புக்காரி புத்தகத்தில் வெளிப்படுத்தி னேன். அதைபடித்தவர்களிடம் சுத்தம் செய்பவர்களின் மேல் மரியாதை
ஏற்படுத்தியது. காட்டுக்குட்டி நாவல் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் போராட்டத்தை சொல்கிறது.

சில புத்தகங்கள் மனிதனை நிறைய மாற்றுகிறது. தைரியத்தை, தன்னம்பிக்கையை கொடுக்கிறது. சமூகத்தில் உண்மையான பாசமும் அக்கறையும் உடையவர்கள் தானாக சாய்வுக்கு தேடுவது புத்தகங்களைத்தான். அதை படிக்கும்போது போராட்டக் குணத்தையோ, தவறான கண்ணோட்டத்தையோ மாற்றிவிடுகிறது.

விமர்சன பார்வை சிந்திக்கத் துாண்டும்

எழுத்தாளர் ஜான்பாஸ்கோ, திருச்சி

மிகச்சிறந்த புத்தகமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய நுாலாசிரியராக எழுத்தாளராக இருந்தாலும் நமக்குள்இருக்கும் சமூக விரோத கருத்துக்கள் நம்மை அறியாமல் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒரு வாசிப்பாளராக மற்றவர்களால் இதை படித்து பார்த்து உணர முடியும்.

விமர்சன பார்வையுள்ள ஒரு வாசிப்பாளர், சிறந்ததாக மதிக்கப்படுகிற மிகப்பெரிய புத்தகத்தில் உள்ள இதுபோன்ற விஷயங்களை வெளிக்கொணர முடியும். இந்த விமர்சனப் பார்வை தான் நம்மை சிந்திக்க துாண்டும். இந்த பார்வை தான், வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித குலத்தை முன்னேறச் செய்யும்.

இன்னொரு உலகை திறக்க வைக்கும்

எழுத்தாளர் தமயந்தி, திருநெல்வேலி

இன்னொரு உலகத்திற்குள் போய் வாழ்ந்து பயணிக்கும் உணர்வை தருவது புத்தகங்கள் தான். ஆங்கில எழுத்தாளர் எமிலி டிக்கன்சன் கவிதைகளை படிக்கும் போது, மாற்றுக் கருத்துக்களை,
மாற்று அரசியலை எழுதும் போது எந்தளவுக்கு துயரத்தையும் எதிர்ப்பையும் சந்தித்திருப்பார் என்ற கேள்வி என்னை நகர்த்தியது. பிரபஞ்சனின் சந்தியா என்ற நாவலில் வரும் சந்தியா கதாபாத்திரம்தான், என் வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்கியது.

குறிப்பாக பொய் முகமூடி அணியக்கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். பெண்களுக்கு பிறந்த நாள், விழாக்களுக்கு வாழ்த்த நினைத்தாலோ, சாதனைகளை பாராட்ட நினைத்தாலோ புத்தகங்களை பரிசளியுங்கள். என் தந்தை புத்தகங்களை பரிசளித்ததால் தான் எழுத்தாளராக நிற்கிறேன்.

மனதுக்கான பயிற்சியாக புத்தக வாசிப்பு

கல்வியாளர் கல்விச்சிறகு கார்த்திகேயன்,
வேலூர்

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் உலகம் முழுவதும் இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்கான பயிற்சியாக புத்தக வாசிப்பு இடம்பெறுகிறது. புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நமது மூளை  சிறப்பாகவும், கூர்மையாகவும் செயல்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தொழில்நுட்பத்தன் வளர்ச்சி காரணமாக வாசிப்பின்  முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

தொலைக்காட்சி, இணையதளம் போன்றவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் வாசிக்கும்  பழக்கத்தை குழந்தை பருவத்தில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும்.

புத்தகம் வாசிப்பது என்பது படிப்பு, வேலைக்கான உத்தரவாதம் அல்ல. அன்றாட வாழ்க்கையில் இயல்பான செயல்பாடாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One