எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கீடு

Thursday, May 31, 2018

சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம்  ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு முறையில் தர வரிசை ரத்து செய்யப்பட்டதுடன், மாணவரின் செல்போனுக்கு உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி செலவில் ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்தார்.


இந்த ஆண்டு முதல் இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல ரகசிய குறியீடுகள் கொண்ட கிழியாத வகையில் தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது.




கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது. இதையடுத்து, மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கினை, இந்த ஆண்டிலேயே அடைவது என தீர்மானித்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தவும், எளிமைப்படுத்தவும், அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.


நபார்டு வங்கி உதவியுடன் அறிவியல் உபகரணங்கள், கணினிகள், அறிவியல் ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணித ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் தூய்மைப் பணிகள் “100 நாள் வேலை” திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.


முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்.





மேலும், 3090 உயர்நிலைப் பள்ளிகள் - 10 கணினிகளுடனும், 2939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு - 20 கணினிகளுடனும் கூடிய  ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக 3000 பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா 2 லட்சம் வீதம் 60 கோடி செலவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறோம்.


கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில்  8869 பள்ளிகள் 90,889 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 32 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.


உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு 24-1-2018 முதல் 15-4-2018 முடிய மாநில அளவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம்   மற்றும் காட்சிக்கூடம்,  கீழடி, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி, திருச்சி, கோவை, சென்னை மாவட்டங்களில் அமைக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் 6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One