எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

`அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

Wednesday, May 23, 2018

தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம், சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத்திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்தனர் என்ற தகவல் வெளியாகியது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதுக்கான காரணம் என்ன? முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா ? மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா? இவை, எதையும் பள்ளிக் கல்வித்துறை கவலைப்படவில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடரவில்லை. ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். `தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரங்களை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மறைமுகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்குவித்தும் வருகிறது'' என்றார்.

``அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் க.சாந்தகுமார். இது குறித்து அவர் பேசுகையில், ``தனியார்ப் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் விண்ணப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள்உள்ளன. இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத்தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது'' என்றார். பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ணமில்லை’ என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One