அரிமளம் அருகே உள்ள கிராம கோயில் மண் குதிரை 11ம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தில் அட்டைப் படமாக வந்துள்ளது. இது எங்கள் கிராம திருவிழாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் பகுதியைச் சுற்றியுள்ள அரண்மணைபட்டி, விராச்சிலை, பனையப்பட்டி, சாஸ்தார்கோவில், செங்கீரை, ராயவரம், நம்பூரணிபட்டி, கீழாநிலைக்கோட்டை, புதுநிலைப்பட்டி, கே.புதுப்பட்டி, ராயவரம், புலிவலம், மிரட்டுநிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அய்யனார் கோயில்களில் வருடம் தோறும் குதிரை(புரவி) எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம். வருடம் தோறும் குதிரை எடுப்பு திருவிழா நடத்தி இரவு நேரங்களில் கோயில் அருகிலேயே புராண நாடகம், கலை நிகழ்ச்சி நடத்தி அய்யனாரை வழிபட்டு வருகின்றனர்.
இதனிடையே நடப்பு வருடம் தமிழக அரசு 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டை படம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை தலைகுடை அய்யனார் கோயில் மண் குதிரை அச்சிடப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இது எங்கள் கிராம கோயில் விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இது பற்றி செங்கீரையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, எங்கள் ஊரில் நடைபெறும் விழாக்களில் ஊர் காவல் தெய்வமான தலைகுடை அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா மிக முக்கியமானது. பெரும்பாலும் திருவிழா வைகாசி மாதம் கடைசி தேதிகளில் நடைபெறும். திருவிழா தொடங்குவதற்கு 2 மாதம் முன்னர் மண் குதிரை செய்யும் வேளார் இனத்தவர்களிடம் அய்யனார் குதிரை செய்து தர வேண்டி பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி அரண்மனை மற்றும் 5 ஊர் சார்பில் 1 குதிரையும் செய்வதோடு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப குதிரைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை தொடர்ந்து விழாவுக்கு முதல் நாள் ஊரார்கள், பக்தர்கள் வேளார் வீட்டுக்கு சென்று அங்குள்ள குதிரைகளை தோளில் சுமந்து வந்து செல்லாயி அம்மன் மந்தையில் வைத்து புஜை செய்து, சாமியாட்டம் நடைபெறும். அடுத்த நாள் குதிரை எடுப்பு விழா நடைபெறும். அப்போது ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் குதிரைகள் செங்கீரையில் உள்ள தலைகுடை அய்யனார், செல்லாயி அம்மன், முன்னோடி கருப்பர், அடைகலம்காத்தான் ஆகிய கோயில்களுக்கு குதிரைகள் பிரித்து அனுப்பட்டு கோயில் வாசலில் காவலுக்கு வைக்கப்படும். இந்நிலையில் எங்கள் கிராம கோயில் மண் குதிரை தமிழக அரசு பாடப் புத்தகத்தில் வந்தது பெருமையாக உள்ளது என்றனர்.
இதுபற்றி புதுக்கோட்டை கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வனிடம் கேட்டபோது, 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழர்களின் கலாசாரம், மரபு, பாரம்பரியம், வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் விதமாக அட்டை படம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் துணை இயக்குனர் அருள்முருகன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் தெரிவித்தார். மேலும் கிராமங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாவான குதிரை எடுப்பு திருவிழாவில் உள்ள சுட்ட மண் குதிரை படம் இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள சுட்ட மண் குதிரையை போட்டோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனடிப்படையில் திருமயம், அரிமளம் பகுதி கிராமங்களில் அய்யனார் கோயில் வாசலில் உள்ள சுட்ட மண் குதிரைகளை போட்டோ எடுத்து சுமார் 150க்கும் மேற்பட்டவை அனுப்பப்பட்டது. இதில் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராம அய்யனார் கோயில் குதிரை சிலை தேர்வு செய்யப்பட்டு பாடப்புத்தகத்தில் அட்டை படமாக அச்சிடபட்டுள்ளது மகிழ்ச்சி அளித்தது. செங்கீரை அய்யனார் கோயில் குதிரை தேர்வு செய்ததற்கு அதன் ஆபரணம் போன்ற வடிவமைப்பு, வர்ண பூச்சு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
No comments:
Post a Comment