திருவண்ணாமலை மாவட்டத்தில்,கல்வித் தேர்ச்சி சதவீதத்தையும், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனையும் அதிகரிப்பதற்கான பல்வேறு சிறப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், மாணவர்களின் இடைநிற்றல் தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றில் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் அனைவரது வருகையையும், செல்போன் செயலி விரல் ரேகை பதிவு முறை மூலம் வருகைப்பதிவேடு பராமரிக்கும் நடைமுறை,தமிழகத்தில் முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய பரிசோதனை திட்டம் திட்டமிட்டபடி வரும் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும்12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு ஆன்லைன் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.அதற்காக, பிரத்யேகமான செல்போன் செயலி (ஆப்) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்த ஒருசில நடைமுறை குறைபாடுகளும் செயல்முறை பரிசோதனைகள் மூலம் சரி செய்யப்பட்டு, முழுமையாக்கப்பட்டுள்ளது.எனவே, அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் செல்போன் வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தியிருந்தோம். அதன்படி, தற்போதுவரை சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
பள்ளிக்கு குறித்த நேரத்தில் சென்றடைந்ததும், தங்களுடைய செல்போன் செயலியை ஆன் செய்து,விரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும். எந்த இடத்தில் இருந்து, எத்தனை மணிக்கு பதிவு செய்யப்படுகிறது என்ற விவரம் ஆன்லைன் மூலம் உடனடியாக எங்களுக்கு கிடைத்துவிடும்.எதிர்பாராத சூழ்நிலையில், செல்போன் எடுத்து வர மறந்தவர்கள், இணைய வசதியில்லாதவர்கள், தங்களுடைய தலைமை ஆசிரியரின் செல்போனில் வருகையை பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தியிருக்கிறோம். விரல் ரேகை பதிவின்போது, இன்டர்நெட் சிக்னல் கிடைக்காவிட்டாலும் (ஆப்லைன்) விரல் ரேகையை பதிவு செய்யலாம். இணைய சிக்னல் கிடைத்ததும் பதிவேற்றிய விபரம் சரியானநேர விபரத்துடன் எங்களுக்கு கிடைத்துவிடும். எனவே, சிக்னல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம்.தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு முதன்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும். தொடர்ந்து தாமமை இருந்தால், அந்த நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறையை தொடர்ந்து, மாணவர்களின் வருகையையும் இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யும் வசதி நடைமுறைக்குவரும். அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வித்தரம் உயரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பெட்டிச் செய்தி: அரசு பள்ளி மாணவரின் வடிவமைப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆசிரியர்களின் வருகையை பதிவேற்றம் செய்வதற்கான செல்போன் செயலியை, நந்தகுமார் என்ற இளைஞர் வடிவமைத்திருக்கிறார்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசுமேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரான இவர், சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். செல்போன்செயலி வடிவமைப்பு, 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகைப் பதிவை ஒருங்கிணைத்து, நொடிப்பொழுதில் கணக்கிடும் ஆன்லைன் நெட்ஒர்க்கிங் கட்டமைப்பு வசதி போன்றவற்றை இலவசமாக செய்து கொடுத்திருக்கிறார்.
No comments:
Post a Comment