டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலிக் காட்சி கலந்துரையாடலில், சின்னசேலம் அருகேயுள்ள தொட்டியம் கிராம மாணவர்கள் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பணமில்லா பரிவர்த்தனை, இணைய வழியில் வங்கி சேவை போன்றவற்றை செயல்படுத்த நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சிஎஸ்சி மையத்தின் மூலம் கிராமப் புறங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் தொடர்பு மைய அலுவலகத்தில், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட காணொலிக் காட்சி மையத்தில், தொட்டியம் பகுதி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது, தொட்டியம் கிராம மாணவர்கள், தன்னார்வலர்களுடனும் உரையாடினார்.
ஒருங்கிணைப்பாளர் டேனியல், பார்த்திபன் ஆகியோர் பிரதமரின் கலந்துரையாடலை மொழி பெயர்த்து தெரிவித்தனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் அப்போது கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு, நிறைவாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment