'பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறனை,
ஆக., மாதத்துக்குள் மேம்படுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி கல்வித்துறை, புதுப்பாடத்திட்டத்தை தொடர்ந்து, பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளது. அதில், நிர்வாக மாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனையடுத்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அந்தந்த ஒன்றியங்களில் நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு வடுகபாளையம் பள்ளியிலும், வடக்கு ஒன்றியத்துக்கு ஆர்.பொன்னாபுரம் பள்ளியிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் நாசரூதீன் தலைமை வகித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிகளில், மாணவர் திறன் மேம்பட ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மாவட்ட கல்வி அலுவலர் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் கேட்டறிய கூட்டம் நடத்தப்படுகிறது.
பள்ளிகளில் ஆய்வு செய்த போது, 30 சதவீதம் மாணவர்கள் பாட புத்தகத்தை வேகமாக படிக்கும் திறன் கொண்டுள்ளனர். மற்ற, 70 சதவீத மாணவர்கள் பாட புத்தகத்தை வேகமாக படிக்க திணறுகின்றனர்.
தமிழ், ஆங்கில மொழி பாடங்களை திணறாமல் வேகமாக படிக்க ஆசிரியர்கள் தொடர் பயிற்சி கொடுக்க வேண்டும். வரும், ஆக., மாதத்துக்குள் மாணவர்கள் பாட புத்தகத்தை வேகமாக படிக்கும் திறனை மேம்படுத்திட வேண்டும்.
மாணவர்கள் மனதில் பாடங்கள் எளிதாக பதியும் வகையில் கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு சில மாணவர்களிடம் எழுத்து பயிற்சி இல்லை. பாடங்களை புரிந்து படிப்பதுடன் எழுத்து பயிற்சியும் மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அடிப்படை கணக்குகள் நன்றாக மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும்.
மாணவர்கள் திறமையை மேம்படுத்தினால், அவர்கள் உயர்கல்விக்கு செல்லும் போது, பாடங்களை எளிதாக கற்க முடியும். இதற்கான ஆலோசனை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களின் பெயர்களை இ.எம்.ஐ.எஸ்.,ல் பதிவிடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்
No comments:
Post a Comment