பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து, அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, டாக்டராகி சாதனை படைத்துள்ளார் ரஜினி கலையரசன் என்ற மாணவர்.இவர், நேரம் கிடைக்கும் போது, தான் படித்த அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, உத்தனப்பள்ளி அருகே கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ரஜினி கலையரசன், 24.பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த இவர், தந்தை வழி பாட்டி லட்சுமியம்மாள், அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள, அரசு பள்ளியில், சத்துணவில் கிடைத்த, மதிய உணவை சாப்பிட்டு படித்து வந்தார்.
இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 468 மதிப்பெண் பெற்றதால், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓசூரில் உள்ள் விஜய் வித்யாலயா பள்ளியில், இலவசமாக மேல்நிலை கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.பிளஸ் 2 தேர்வில், 1,166 மதிப்பெண் பெற்று, கட் ஆப், 198.25 இருந்ததால், மருத்துவம் படிக்க நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரியில் சீட் கிடைத்தது. அங்கு படித்து, கடந்த, மே மாதம் தான், எம்.பி.பி.எஸ்., முடித்தார்.
உத்தனப்பள்ளியில், கிளீனிக் நடத்தி வரும் இவர், ஆரம்பக்கல்வி கற்ற, உத்தனப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியை மறக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது, ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல், தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது:
என் பள்ளிக் காலங்களில், மதிய உணவை இரவுக்கும் வாங்கி, வைத்து கொள்வேன். நான், எம்.பி.பி.எஸ்., படிக்க காரணம் ஆசிரியர்கள் தான். எனக்கும், ஆசிரியராக வர வேண்டும் என ஆசை இருந்தது. விஜய் வித்யாலயா பள்ளியில், தமிழ் வழியில் படித்த போது, பிளஸ் 2வில், கட்ஆப் மதிப்பெண் அதிகமாக எடுத்ததால், ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்து விட்டனர்.
எம்.பி.பி.எஸ்., படிக்கும் போது என் நிலையறிந்த, நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் மற்றும் டாக்டர் சுமிதா ஆகியோர் உதவி செய்தனர்.
எம்.பி.பி.எஸ்.,படித்துக் கொண்டே, நெல்லையில் உள்ள தனியார் பள்ளி, விடுதி மாணவ - மாணவியருக்கு பாடம் எடுத்து, 8,000 ரூபாய் வரை சம்பாதித்து, என் செலவுகளை பார்த்து கொண்டேன்.ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததால், உத்தனப்பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, தலைமை ஆசிரியை ஜெயராக்கினி அனுமதியுடன், பாடம் நடத்தி வருகிறேன். மேலும், எம்.டி., படிக்கவே,கிளீனிக் நடத்தி வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தலைமை ஆசிரியை ஜெயராக்கினி கூறுகையில், ''தற்போது, மருத்துவராக உள்ள ரஜினி கலையரசனுக்கு, நான் மூன்றாவது மற்றும் நான்காம் வகுப்புக்கு பாடம் நடத்தியுள்ளேன். மாணவ - மாணவியருக்கு எளிதில் புரியும்படி, அவர் பாடம் நடத்துகிறார்,'' என்று கூறினார்.
No comments:
Post a Comment