இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், சென்னையில் தலைக்கவசம் (ஹெல்மெட்) விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் விளைவாக, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணியத் தொடங்கியிருக்கின்றனர். இதில் தலைக்கவசம் இல்லாதவர்கள், கடைகளை தேடிச் சென்று தலைக்கவசம் வாங்கி வருகின்றனர். இதனால் தலைக்கவசம் விற்பனை விறு,விறுப்பு அடைந்துள்ளது.
சென்னையில் உள்நாட்டு தயாரிப்பு தலைக்கவசங்களை தவிர்த்து, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தலைக்கவசங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
விலை ரூ.600 முதல் ரூ.20,000: சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள கடைகளில் சாதாரண தலைக்கவசம் முதல் அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.100 வகையான தலைக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ரூ.600 முதல் ரூ. 20,000 விற்கப்படுகிறது. தலைக்கவசங்களின் விலைக்கு ஏற்றார்போல, அதில் நவீன வசதிகளும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளன. அதேவேளையில் ஆர்டரின்பேரில் பல அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசங்கள் செய்தும் கொடுக்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தலைக்கவசம் விற்பûயாளர் ஃபைசுதீன் கூறியது:
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், ஆயிரம் விளக்கு பகுதிகளில் உள்ள தலைக்கவசம் விற்பனை கடைகளில், தலைக்கவசம் வாங்க வருபவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சரக்கு சேவை வரியில் (ஜி.எஸ்.டி) தலைக்கவசத்துக்கு விதிக்கப்படும் 18 சதவீதம் வரியில் இருந்து இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் தலைக்கவசங்களுக்கு வரியில் விலக்கு அளித்தால், அது மக்களை இன்னும் வேகமாக சென்றடையும் என்றார் அவர்.
சாலையோர தலைக்கவசம் வேண்டாம்: இதேபோல தலைக்கவசம் விற்பனையாளர் ரேயான் கூறியது:
சென்னையில் சாலையோர நடை மேடைகளில் தரக்குறைவான, ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தலைக்கவசங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்குவதை காண முடிகிறது. இந்த தலைக்கவசங்கள், எளிதில் உடையக் கூடியதாகும். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. எனவே இத்தகைய தலைக்கவசங்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ரேயான்
No comments:
Post a Comment