தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும் ஒரு செயல்.எழுத்து தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில்முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது' வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களை 'காமராஜர் விருதுக்கு' பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.கலை இலக்கிய திறன், விளையாட்டு போட்டி, அறிவியல் விருது, பள்ளி இணை செயல்பாடுகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்து, நான்கு செயல்பாடுகளிலும் தலா 10 மதிப்பெண் வீதம் 40க்கு கணக்கிட்டு இதில் முன்னுரிமை பெற்றவர்களை விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும்.ஒரு பள்ளி சார்பில் அதிக பட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம். மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேர், பிளஸ் 2வில் 20 பேரை தேர்வுசெய்து அதன் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் காமராஜர் விருது அளிக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்துக்கு தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment