எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சிறுத்தை புலியை அடித்து விரட்டிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

Thursday, August 16, 2018


சிறுத்தை புலியை அடித்து விரட்டிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
சிறுத்தை புலியை அடித்து விரட்டிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது
எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
           
மகளை காப்பாற்ற தனி ஆளாக நின்று சிறுத்தை புலியை விறகு கட்டையால் அடித்து விரட்டிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.


சென்னை கோட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி வழங்கினார்.

டாக்டர் அப்துல்கலாம் விருது, அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் தக்‌ஷா குழுவினருக்கு வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான மையத்தின் இயக்குனர் எஸ்.தாமரை செல்வி, வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார், திட்ட ஆலோசகர் ஹரி, திட்ட அறிவியலாளர் முகமது ரஷீத் ஆகியோரிடம் விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.





கல்பனா சாவ்லா விருது

கோவை மாவட்டம், வால்பாறை வட்டம், பெரியகல்லார் கிராமத்தில் வசிக்கும் முத்துமாரி, தனது மகள் சத்தியா (வயது 11) என்பவரை கடந்த 25.5.2018 மாலை 6.10 மணியளவில், வீட்டின் பின்புறம் சிறுத்தை புலி அடித்து இழுத்துக் கொண்டு சென்றபோது, கையில் கிடைத்த விறகு கட்டையால் தனி ஆளாக அடித்தே சிறுத்தை புலியை விரட்டினார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் சிறுத்தை புலியை விரட்டி தனது மகளை காப்பாற்றிய செயலுக்காக முத்துமாரிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஆளுமை விருதுகள்

முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது பதிவுத்துறையில் ‘ப்ரஜெக்ட் ஸ்டார் 2.0’ என்ற இணைய மென்பொருள் மூலம் பொதுமக்களுக்கு துரிதமான பதிவு மற்றும் இணைய சேவைகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் கே.சி.வீரமணி பெற்றுக்கொண்டார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமிழ்நாட்டில் பொது வினியோக முறையை கணினிமயப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட விருதை அமைச்சர் காமராஜ், மாநில நலவாழ்வு சங்கம்-தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால விழிப்புணர்வு முயற்சிக்காக வழங்கப்பட்ட விருதை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பொது மக்களிடையே நல்லிணக்கமாக செயல்பட்ட வகையில் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. காவிரி தொழில் நுட்பக்குழுமம் தலைவர் ஆர்.சுப்பிரமணியனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் பா.செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூகப்பணியாளர் விருது டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் லதா ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சமூக சேவகர்

சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது திருச்சி கைலாசபுரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனத்திற்கான விருது திருமங்கலம் டெட்டி எக்ஸ்போர்ட்ஸ்க்கு வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக செயல்படும் சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிமிடெட் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக சேவகருக்கான விருது, கோவை இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்திற்கும், சிறந்த சமூக பணியாளர் எம்.சிவக்குமாருக்கும் வழங்கப்பட்டது.

ஏழைப் பெண்களுக்காக சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் ரிவர் தி பவர் ஆப் விமன் என்ற சமூக நல நிறுவனத்திற்கு அதன் சேவையை பாராட்டி, தமிழக அரசின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்காக விருது வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சி திருப்பூர்

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சரின் விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த மாநகராட்சிக்கான விருது திருப்பூர் மாநகராட்சிக்கு (ரூ.25 லட்சம்) வழங்கப்பட்டது.

சிறந்த நகராட்சிக்கான முதல் விருது கோவில்பட்டிக்கும் (ரூ.15 லட்சம்), 2-ம் பரிசு கம்பம் நகராட்சிக்கும் (ரூ.10 லட்சம்), 3-ம் பரிசு சீர்காழி நகராட்சிக்கும் (ரூ.5 லட்சம்) வழங்கப்பட்டது.

சிறந்த பேரூராட்சிகளான விருது முதல் பரிசு ஜலகண்டாபுரம், சேலம் மாவட்டம் (ரூ.10 லட்சம்), 2-ம் பரிசு பழனி செட்டிபட்டி, தேனி மாவட்டம் (ரூ.5 லட்சம்), 3-ம் பரிசு பாலகோடு, தர்மபுரி மாவட்டம் (ரூ.3 லட்சம்) வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் (ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், பாராட்டுச் சான்று மற்றும் பதக்கம் கொண்டதாகும்) தேனி மாவட்டம் சி.பாஸ்கரன், கடலூர் மாவட்டம் மகேஷ், நெல்லை மாவட்டம் அஷ்வீதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One