பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* மழைக்காலங்களில் மாணவர்களும் அவர்தம் உடமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகள் அல்லது குடைகளை பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
* மழை காரணமாக பள்ளியில் ஏதேனும் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்.
* தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருந்தால் அதன் அருகில் மாணவர்கள் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள், நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும்.
* பள்ளி கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக இருக்கிறதா என்று அவ்வப்போது சோதிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டிடப் பணிகள் நடந்தால் அதன் அருகில் மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். அந்த இடங்களை சுற்றி தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
* மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.
* மழைக் கால மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க அருகில் உள்ள அரசு மருத்துவ மனை அல்லது ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை அப்போதைக்கப்போது கண்காணித்து வர வேண்டும்.
No comments:
Post a Comment