சென்னை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கப் போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் அவர் பெங்களூரில் அக்.5-இல் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு "தொழிற்புரட்சி நாம் தயாரா?' (என்ற தலைப்பில் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கப் போட்டி சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. இதில் ஏற்கெனவே மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஆறு நிமிஷங்களில் தொழிற்புரட்சி குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து, இரண்டு நிமிஷங்களில் நடுவர்களின் வினாக்களுக்கு பதிலளித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகள்: இந்தப் போட்டியில் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி ஃபிரான்சினா பிளெஸி ஜெபமலர் முதலிடத்தையும், கும்பகோணம் மாவட்டம் சோழன் மகால் ஜிஎஸ்கே நினைவுப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி வி.ஆர்.லீனா இரண்டாமிடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி நிரஞ்சனி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஒரு ஆண்டுக்கு உதவித் தொகை: இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் முதல் இடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகள் பெங்களூரில் அக்.5-ஆம் தேதி விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு ஆண்டுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும். மேலும் 9 மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ. 1,000 மாதந்தோறும் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். இது தவிர இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள், அறிவியல் உபகரணங்கள் பரிசாக வழங்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment