அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதன்படி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 70 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 56 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகளும் வழங்கப்படுகிறது.
ஏற்பாடு மும்முரம்
நடப்பு கல்வியாண்டில் புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதையொட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் டி.ஜெகன்நாதன், செயலாளர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் காலணி, புத்தகப்பைகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
முன்னதாக வருகிற அக்டோபர் மாதம் வண்ண பென்சில்கள் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 9 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ 6, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் வண்ண பென்சில்கள் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த பொருட்களை வழங்க தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் மும்முரமாக உள்ளது.
No comments:
Post a Comment