கணிதம் இன்றும் பல மாணவர்களுக்கு விருப்பமான பாடமாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் எளிமையாக புரிந்துகொள்ள இயலாமையே..! ஆனால், கணிதத்தை எளிய முறையில் கற்க முடியும் என்னும் நம்பிக்கையை வளர்ப்பது அவற்றை கற்பிக்கும் ஆசிரியரின் கையிலே உள்ளது.
தன் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையும், அதனை எவ்வாறு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்து இருப்பவரே சிறந்த ஆசிரியர். அதை புரிந்து கொண்டு கணிதம் ஒரு கடினமான பாடமாக நினைக்காமல் எளிய முறையில் அனைத்து தரப்பு மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் கற்பித்து வருகிறார் ரூபி தெரஸா என்னும் அரசு பள்ளி ஆசிரியர்.
நம் நாட்டில் அரசு பள்ளி, அதிலும் தமிழ் வழிக் கல்வி என்றால் குழந்தைகளுக்கு பயன் அளிக்காது, அரசு பள்ளியில் சிறந்த கல்வி கற்பிக்கமாட்டர்கள் என்று மக்களின் ஆழ் மனதில் இருக்கும் எண்ணத்தை தங்களின் கற்பிக்கும் செயல்களின் மூலம் தகர்த்தெறிய ரூபி கேத்தரின் தெரஸா போன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களின் திறமைகள் வெளியுலகிற்கு வருவதில்லை.
ரூபி கேத்தரின் தெரஸா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக திறன்மிகு ஆசிரியர் பணியில் இருக்கும் இவர் 10 ஆண்டுகளாக அரசு பள்ளியில் பணி செய்து வருகிறார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கு வருவதே அரிது..! சிரமங்களை கடந்து கல்வி கற்க வரும் பிள்ளைகள் பள்ளி பாடத்திலும் பல சிரமங்களை சந்திக்கின்றனர். அரசு பள்ளியின் நிலை பற்றி நாம் நன்கு அறிந்ததே. அரிதாக வரும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் பாடம் எம்முறையில் எளிமையாக கற்பித்தால் நன்றாக நினைவில் நிற்கும், சிரமமின்றி கற்க முடியும் என்ற வழியை கண்டறிந்தார் ரூபி ஆசிரியர்.
கணக்கு பாடத்தை மனப்பாடம் செய்வதில் எந்த பயனுமில்லை என்பதை அறிந்து, அதற்காக புதிய வழியை கண்டறிந்தார். வாய்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் என தொடங்கி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் வரை அனைவரையும் குழம்ப வைக்கும் சமன்பாடுகள், தேற்றங்கள், அளவியல் உள்ளிட்ட பல பிரிவுகளையும் எளிய செயல்முறையில் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
“ படைப்பாற்றலுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2017-ஐ பெற்றுள்ளார் ரூபி கேத்தரின் தெரஸா ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது “ . 2018-ல் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களிடம் இருந்து " கனவு ஆசிரியர் விருதை " பெற்றுள்ளார்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் எளிய முறையை வீடியோக்கள் எடுத்து வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார் ரூபி ஆசிரியர். இதற்காக பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து ஊக்கமளித்துள்ளனர். அதன்பின் ரூபி ஆசிரியர் தனது மகனின் உதவியுடன் Rubi Theresa என்கிற பெயரில் youtube சேனல் ஒன்றை தொடங்கி எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.
இதுவரை 550-க்கும் அதிகமான வீடியோக்கள் அந்த சேனலில் குவிந்து கிடக்கின்றன. இவரின் youtube வீடியோக்கள் பல நாடுகளில் பல மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சிறந்து விளங்குகிறது. அதுமட்டுமின்றி rubitheresa.blogspot.in என்ற வலைத்தளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் rubi Theresa-primary.blogspot.in என்ற வலைத்தளத்தில் அடிப்படை கணக்குகளையும் எளிமையாக விவரிப்பதை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
ரூபி ஆசிரியர் எளிய முறையில் கற்பிக்கும் கணித செயல்முறைகள் வாட்ஸ் ஆப், இணையதளம், youtube வீடியோ மட்டுமின்றி செயலி(app) வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற தளங்கள் போல ஆஃப் மூலமாகவும் கணித வீடியோக்களை பார்த்து கற்றுக் கொள்ள ஏதுவாக RUBI MATH App இலவசமாக Youturn சார்பில் உருவாக்கப்பட்டது. சென்ற ஆண்டு Rubi Math என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிமுகப்படுத்தினார். அதில், Youturn-ன் பங்களிப்பு செய்தது பெருமையாக இருந்தது. Rubi Math செயலி அறிமுகப்படுத்திய நேரத்தில் Youturn சார்பில் திரு. ஐயன் கார்த்திகேயன் பங்குபெற்று அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
Rubi Math app மூலம் பெற்றோர்களும் எளிய முறையில் கணித முறைகளை கற்று தங்கள் பிள்ளைகளுக்கு கணிதத்தை தெளிவாக கற்பிக்கலாம். 8 முதல் 12 வகுப்பு வரையிலான கணிதங்கள், தேர்வு குறிப்புகள், போட்டித் தேர்வு என பல செயல்முறைகள் வீடியோக்களாக உள்ளன. இதுவரை Rubi Math app-ஐ 50,000 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட Rubi Math app புதிய பரிணாமத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய பணியை மேற்கொண்டவர் மென்பொருள் பொறியாளர் செந்தில் சிவநாத் அவர்கள். அதில், தரவு கட்டமைப்பில் உறுதுணையாக இருந்தவர் youturn-ஐ சேர்ந்த கௌதமி ராமசாமி அவர்கள். மாணவர்களுக்கான கல்வி பணியில் நமது பங்கும் இருப்பதை பெருமையாக நினைக்கிறது youturn..
மாணவர்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்களுக்கு தெளிவு இருந்தால் பள்ளிக்கும், பாடத்திட்டத்திற்கும் மற்றும் மாணவர்களின் வெற்றிக்கும் எவ்வித தொடர்புமில்லை என்கிறார் ரூபி ஆசிரியர்.
No comments:
Post a Comment