எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை: என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

Thursday, September 13, 2018




அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்.எம்.எம்.எஸ்.) வரும் செப்.17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தப்படும்.
இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, அரசு உதவி பெறும், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும். தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 6, 695 மாணவர்கள் உதவித் தொகை பெறத் தகுதி உள்ளவர்கள் ஆவர்.
நிகழாண்டு உதவித் தொகை பெற தகுதியுள்ள எட்டாம் மாணவர்களைத் தேர்வு செய்யும் வகையில் என்.எம்.எம்.எஸ். தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும். இதற்காக தமிழகத்தில் அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை செப்.17-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?: தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள்) 2018- 2019-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
2018-2019-ஆம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், பிற சமுதாயப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: என்.எம்.எம். எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை செப்.17 முதல் செப்.30 வரை (www.dge.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்து வரும் தகுதியுடைய மாணவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
இதையடுத்து புகைப்படத்தை ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் அக்.1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One