தமிழகத்தில் உயர் கல்வித் துறையில், புதிய கல்லூரிகள், புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையத்தில் நடைபெற்ற விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் மேலும் கூறியது: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், பொறியியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததுபோன்ற தோற்றம் காணப்படுகிறது. ஆனால், நிகழாண்டும் 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. தமிழகத்தில் 76 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் அதிகம் சேர்ந்துள்ளதால், பொறியியல் மாணவர் சேர்க்கை குறைந்தது போன்ற தோற்றம் உள்ளது. தமிழகத்தில் 530 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கர்நாடகத்தில் 200 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அதனால்,கர்நாடகத்தில் அதிகம் சேர்ந்தது போன்றும், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்க்கை குறைந்தது போலவும் காணப்படுகிறது.
இந்திய அளவில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 25.8 சதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இது 48.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்விக்கான வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்பட்டு, அனைவரும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி பயிலும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. உயர் கல்வித் துறையிலும் புதிய கல்லூரிகள் மற்றும் புதிய பாடத் திட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் 48.6 சதவீதம் ஆக உயர் கல்வி பெறுவோர் அதிகரித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 4 பொறியியல் கல்லூரிகளும், 5 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. நெல்லை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நான்கு பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தலா 240 பேர் சேர்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுத்தாள் மதிப்பீட்டின்போது தவறுகள் செய்தவர்கள் மீது உரிய தண்டனை அளிக்க மாநில அரசு தயங்காது என்றார்.
No comments:
Post a Comment