தமிழகத்தில் எழும் வேதனை குரல்கள்
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
பள்ளிகளில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் தயக்கம் காட்டும் நிலைக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 260 நடுநிலைப்பள்ளிகள், 3,044 உயர்நிலைப்பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 959 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் 64 ஆயிரத்து 855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50 ஆயிரத்து 508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27 ஆயிரத்து 891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73 ஆயிரத்து 616 ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப்பள்ளிகளில் 25 லட்சத்து ஆயிரத்து 483 மாணவர்களும், 24 லட்சத்து 67 ஆயிரத்து 455 மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் 42 லட்சத்து 86 ஆயிரத்து 450 மாணவர்களும், 41 லட்சத்து 9ஆயிரத்து 752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதில் ஆண், பெண் ஆசிரியர்கள் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் பள்ளியில் பாகுபாடின்றி காலிபணியிடங்களுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் பணியாற்ற மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியர்களிடம் அதேபள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எல்லை மீறும் சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மாணவர்களின் எல்லைமீறலை வெளியே சொல்ல முடியாமல் ஆசிரியைகள் பிரச்னைக்குரிய பள்ளிகளை விட்டு வெளியேறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதேபோல் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியைகளுக்கு நேரடியாகவே மாணவர்கள் மிரட்டல்கள் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களை ஏற்றிவிடும் ஏணிப்படியாக இருக்கும் ஆசிரியைகள் இப்படிப்பட்ட பல இன்னல்களை சந்திப்பதாக வேதனை குரல் எழுப்புகின்றனர்.
ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் பாதுகாப்பற்ற சூழலிலேயே பணியாற்றி வருகின்றனர். ஆண் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறுவது போல் பெண் ஆசிரியைகள் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதால் இதனை தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தொடக்கப்பள்ளிகளிலேயே பணியாற்ற தோன்றுகிறது
பெண் ஆசிரியைகள் கூறுகையில், ‘அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை குறைகூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட சதவீதம் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கமற்று நடந்து கொள்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்தவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஆனால் சில மாணவர்கள் அத்துமீறல் பேச்சை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் தொடக்கப்பள்ளிகளிலேயே பணியாற்றலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.
பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுடன் தொடர்பு வேண்டும்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடம் நல்லமுறையில் கற்பிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள். ஆனால் தங்களது பிள்ளைகள் பள்ளியில் என்ன படிக்கிறார்கள்?, பள்ளிக்கு வருகிறார்களா? இல்லையா என்று பள்ளிக்கு வந்து பார்ப்பதே இல்லை.
பெற்றோர்களுக்கான கூட்டம் நடத்தினாலும் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தில் எட்டிக்கூட பார்ப்பதில்லை. பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் நிலை அறிய பள்ளிகளில் அடிக்கடி சென்று கூட்டத்தில் கலந்து கொண்டால் பிள்ளைகள் தீய வழியில் செல்வதை தடுக்க முடியும். இதனால் பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுடனான தொடர்பு மிக முக்கியம் என்கிறார்கள் ஆசிரியைகள்.
No comments:
Post a Comment