சென்னை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முதல் கட்டமாக, 320 பள்ளிகளுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கையேட்டை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார்.
இதுகுறித்து, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, தனியார் பங்களிப்போடு, அரசு பள்ளிகளில், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளி மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கையேடு வழங்கப்பட உள்ளது.கையேட்டில், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை, அதை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மற்ற பள்ளிகளுக்கு பயிற்சி அளிப்பர்.'ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது' என, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும், ஜனவரிக்குள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தனியார் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கடிதம் எழுதி உள்ளார். அதேபோல, 6 மற்றும், 9ம் வகுப்புகளுக்கு, புதிதாக வழங்க உள்ள, மூன்றாம் பருவ புத்தகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பாடத்திட்டம் இணைக்கப்பட உள்ளது.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment