எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மணம் முடித்த கையோடு பள்ளி வளர்ச்சிக்கு உதவிய மணமக்கள்: குவியும் பாராட்டுக்கள்!

Sunday, September 2, 2018






திருமணம் முடிந்ததும் மணமக்கள் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்தார்கள். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் மணமக்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

நெல்லை மாவட்ட மானூர் அருகே இருக்கிறது, கருவநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதை விடவும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவே பெற்றோர் ஆர்வம் காட்டும் நிகழ்வு குக்கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. அதனால் இந்தப் பள்ளியில் குழந்தைகளே இல்லாமல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதனால் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து பள்ளியில் எ.ல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க நடவடிக்கை எடுத்ததுடன், கிராமத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல் இதே பள்ளியில் சேர்க்க வேண்டும் என முடிவு செய்தார்கள். அதற்கு ஏற்ற வகையில், பள்ளியில் கம்ப்யூட்டர் வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, தரமான இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிக்கப்பட்டது.

இளைஞர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் முயற்சியால் அந்த தொடக்கப் பள்ளியில் தற்போது 60-க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். கருவநல்லூர் கிராம மக்களின் சிந்தனையில் பள்ளியின் வளர்ச்சி நிறைந்துள்ளது. அதனால் திருமணத் தம்பதிகள் கூட பள்ளிக்கு உதவும் நிகழ்வு நடந்திருக்கிறது. கருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெய்லரான வேல்குமாருக்கும் உஷாவுக்கும் கடந்த 30-ம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.





தமிழ் முறைப்படி திருமணம் நடந்து முடிந்ததும் மணமக்கள் இருவரும் மணக்கோலத்திலேயே நேராக கருவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்றார்கள். பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் இருவரையும் வாழ்த்தினார்கள். பின்னர் மணமக்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பாக ரூ.5001 அன்பளிப்பாக அளித்தார்கள். திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களுக்கு மத்தியில், பின்னடைந்த கிராமத்தில் உள்ள பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்கிற சிந்தனையை விதைத்துள்ள மணமக்களை கிராமத்தினர் பாராட்டினார்கள்.

இந்த விவரம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. மணவாழ்வின் தொடக்கத்தை பள்ளிக் குழந்தைகளோடு தொடங்கிய இந்த ஆக்கபூர்வமான சிந்தனை கொண்ட மணமக்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

7 comments

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One