எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்,

Friday, September 28, 2018

 மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும்
அரசுப்பள்ளி மாணவர்கள், தங்களது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைவேண்டி விண்ணப்பித்து, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். 26.09.2018 அன்று டெல்லியில் நடந்த CSIR (Council of Science and Industrial Research) Innovation Award for School Children (CIASC-2018) போட்டியில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தனுஷ்குமார், `செவித்திறன் குறைந்தவர்களுக்கு செல்போன் ஒலியை  உணர்ந்தறிதல்'  குறித்த கருவியின் மாதிரியைக் கண்டறிந்து, இந்திய அளவில் 4-வது பரிசைப் பெற்றுள்ளார். இவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக மாறிவருகிறது புதிய செயல்வழிக் கற்றல் முறை.
``பல்வேறு செயல்திட்டத்தைத் தயாரிக்கும் வகையில் புதிய செயல்வழிக் கற்றல் முறையை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக பள்ளிக்கல்வித் துறை. இந்தக் கற்றல் முறையில் தற்போதுள்ள சமூகப் பிரச்னைகள் குறித்து மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி, அவர்களே அதற்குரிய தீர்வுகளையும் கண்டறிவார்கள்'' என்கின்றனர் ஆசிரியர்கள்.


அரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் சேர்க்கையால் 3,000 பள்ளிகள் மூடப்படும் அச்சம் நிலவிவரும் நிலையில், ஏற்கெனவே படித்துவரும்  மாணவர்களை தக்கவைக்கவும், புதிதாக மாணவர்களைச் சேர்க்கவும் IMPART (Improving Participation) என்ற புதிய செயல்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த களம் இறங்கி இருக்கிறது பள்ளிக்கல்வித் துறை.
திருவாரூர் பள்ளி ஆசிரியர் தண்டபாணி, ``2016 - 17ம் கல்வியாண்டில் எங்களுடைய மாவட்டத்தில் மாதிரித் திட்டமாக அறிமுகப்படுத்தினோம். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். எங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தியபோது, பெண் கல்வியின் அவசியம் குறித்து திட்டப்பணிகளைச் செய்தனர். இதனால் கிராமங்களில் விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றல் நின்றதோடு, கற்றல் முறையிலும் மிகுந்த ஈடுபாட்டைக் காண்பித்தனர். இதையே முன்மாதிரியாகக்கொண்டு 2017-18ம் கல்வியாண்டில் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தியது" என்றார்.
செயல்முறை திட்டவழி கற்றல் குறித்து பயிற்சியாளராக உள்ள ஆசிரியர் முருகானந்தம்,  ``மாணவர்கள் அவர்கள் பாடத்தில் உள்ள ஒரு தலைப்பை அவர்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை மையமாகக்கொண்டு தேர்வு செய்யவேண்டும். அவர்களே அந்தப் பிரச்னைகளுக்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் கண்டறிய வேண்டும். அதை ஓர் ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆய்வுக்கட்டுரையை மேலாய்வு செய்து, அதிலிருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுத்து மாணவர்களின் செயல்திறனைச் சோதித்து, பிறகு சிறந்த செயல்திட்டங்களைத் தெரிவுசெய்வர். அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அனுப்பப்படும். சிறந்த செயல்திட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்" என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One