குறிஞ்சி மலர் ஆசியாவில் மட்டுமே காணப்படும் செடி இனம். இந்தியாவில் சுமார் 50 வகை குறிஞ்சிச் செடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. Strobilanthes kunthiana என்ற இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. 7, 12, 16, 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குறிஞ்சிச் செடிகள் பூக்கின்றன. உயிர் தப்பிப் பிழைப்பதற்கான வழியாக இவ்வாறு நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குறிஞ்சிப் பூக்களில் இருக்கும் பூந்தேன் மிகவும் சுவையானது. பூக்களை நாடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, செடிகள் மடிந்துவிடுகின்றன. மீண்டும் விதைகளில் இருந்து புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய காலண்டர் அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன.
No comments:
Post a Comment