இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆதார் ஆணையம் (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அளித்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த வாரம் ஆதார் அட்டையின் பயன்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அலைபேசி சேவை நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன்படி இனிமேல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்கான , விரிவான செயல் திட்டம் ஒன்றை
15 நாட்களுக்குள் தயாரித்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இனிமேல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து மாற்று அடையாள ஆவணங்களின் நகல்களை, கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும் பழைய நடைமுறைக்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment