எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 16-10-2018

Monday, October 15, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:



திருக்குறள்:66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.


பழமொழி :

Civility costs nothing

குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது

பொன்மொழி:

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

வில்லியம் பிளேக்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?
ஆலம் ஆரா (1931)

2.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா

நீதிக்கதை

மூன்று மீன்களின் கதை!

அதிக மேடோ, பள்ளமோ இல்லாத இடத்தில் நீர் நிறைந்த ஒரு குட்டை இருந்தது, அந்தக் குட்டையில் அதிகமான மீன்கள் இருந்தன.
அவற்றுள் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.

அந்த மூன்று மீன்களுள் ஒன்று முன்னெச்சரிக்கையுள்ள மீன், இன்னொன்று சமயத்திற்கேற்றபடி நடந்து கொள்ளக் கூடியது. மூன்றாவது புத்தி குறைவானது.

ஒருநாள் மீன்பிடிப்பவர்கள் அந்தக் குளத்திற்கு வந்து பார்த்தனர். அந்தக் குட்டையிலிருந்த மீன்களையெல்லாம் பிடித்து விட வேண்டும் என திட்டமிட்டனர்.
அவர்கள் அந்தக் குட்டையின் நான்கு பகுதிகளிலும் வடிகாலை வெட்டி விட்டனர்.

இதனால் அந்தக் குட்டையிலிருந்த தண்ணீர் வடிந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

குட்டையிலிருந்த நீர் குறைந்து கொண்டே செல்வதைப் பார்த்த முன்னெச்சரிக்கையுள்ள மீன், “குட்டையில் நீர் குறைகின்றது. இது ஆபத்து வரப்போவதைக் காட்டுகிறது. அதற்குள் நாம் எப்படியாவது வேறு ஒரு நீர்நிலைக்குப் போய் விடலாம். முன்கூட்டியே வரவிருக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியைக் கண்டவன் பின்னர் மகிழ்ச்சியுடன் வாழ்வான்” என்றது.

அந்த மீனின் பேச்சைக் கேட்ட புத்தி மந்தமான மீன், “ஆபத்து வரும் என்று நான் நினைக்கவில்லை. அவசரப்பட்டு, நெடுநாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குட்டையை விட்டு வெளியேற எனக்கு மனமில்லை.” என்றது.

இந்த இரு மீன்களின் பேச்சையும் கேட்ட சமயோசித புத்தியுள்ள மீன், “ஆபத்து வரும் போது அதற்கேற்றபடி ஏதாவது செய்து தப்பித்துக் கொள்ளலாம்” என்றது.

முன்னெச்சரிக்கையுள்ள மீன் வடிகால் மூலம் வெளியேறிக் கொண்டிருந்த நீருடன் போய் வேறொரு நீர் நிலையில் வாழத் தொடங்கியது.

மறுநாள், மீன்பிடிப்பவர்கள் வந்தனர்.
நீர் ஓரளவு வடிந்திருப்பதைப் பார்த்துவிட்டு, குட்டையிலிருந்த மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர்.
மந்தப் புத்தியுள்ள மீன் மாட்டிக் கொண்டது. பிடிபட்ட மீன்கள் அனைத்தையும் கயிற்றினுள் கோர்த்து அருகே இருந்த சிறு பாறையின் மேல் வைத்தனர்.

இதைப் பார்த்த சமயோசித மீன் தானாகவே பிடிக்கப்பட்ட மீன்கள் கோர்க்கப்பட்டிருந்த கயிற்றைக் கவ்விப் பிடித்துக் கொண்டது.
குட்டையிலிருந்த மீன்களைப் பிடித்த மகிழ்ச்சியில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் அடுத்திருந்த நீர்நிலையில் தாங்கள் கயிற்றுள் கோர்த்து வைத்திருந்த மீன்களைக் கழுவுவதற்காக நீரில் முக்கி எடுத்தனர்.
அப்போது கயிற்றைக் கவ்விக் கொண்டு தொங்கிய சமயோசித புத்தியுள்ள மீன் அவர்களுக்குத் தெரியாமலேயே தண்ணீருக்குள் போய் தப்பியது.
மந்தப் புத்தியுடைய மீனின் நிலைமை அவ்வளவுதான். முன்னெச்சரிக்கையும், சமயோசிதமாக நடக்கும் புத்தியுள்ள மீன்கள் தப்பின.

வாழ்க்கையில் முன்னெச்சரிக்கையும், சமயோசித புத்தியுமுடையவர்கள் சுக வாழ்வடைவார்கள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன்

2.அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!

3.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி விரைவில் அடிக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

4.தாம்பரம் - நெல்லை இடையே 'சுவிதா'சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

5.இளையோர் ஒலிம்பிக் போட்டி பெண்கள் ஹாக்கியில் இந்தியா வெள்ளி பதக்கம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One