''பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது,அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வி துறையில், பிளஸ் 1க்கு பொது தேர்வு, 'ரேங்கிங்' முறை ரத்து, புதிய பாடத்திட்டம் போன்ற அறிவிப்புகள், கல்வி தரத்தை உயர்த்த உதவும் என, கல்வியாளர்கள் பாராட்டினர். இந்நிலையில், 'பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண், உயர் கல்விக்கு எடுத்து கொள்ளப்படாது' என, திடீரென பள்ளி கல்வி துறை அறிவித்தது. உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு, பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையாக உள்ள நிலையில், 'பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டால், அந்த பாடங்கள், பள்ளிகளில் நடத்தப்படாது' என, கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். அதைப் போலவே, பல பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்துவதை விட்டு, 'நீட்' நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 பாடங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில், ''பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நிருபர்களிடம், அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக, முதலில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை அறிவிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மூன்று ஆண்டுகளாக தேர்வு சுமை இருக்க கூடாது என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டதால், அரசாணை திருத்தம் செய்யப்பட்டது. தற்போதுள்ள நிலையில், பிளஸ் 1க்கான பொது தேர்வு முறை ரத்து செய்யப்படவில்லை. அரசு தேர்வுத்துறை தேர்வை நடத்தி, தேர்ச்சியை அறிவிக்கும். பிளஸ் 1 தேர்ச்சி இல்லாமல், பிளஸ் 2வுக்கு செல்ல முடியாது.
அதேபோல், பிளஸ் 1 பாடங்களை, ஒவ்வொரு பள்ளியும் கட்டாயம் நடத்த வேண்டும். பிளஸ் 1 மாணவர்கள், வெறும் தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெறாமல், குறைந்தபட்சம், 50 சதவீதம் வரை மதிப்பெண் பெற வேண்டும். அந்த அளவுக்கு, மாணவர்களை, பள்ளிகள் தயார்படுத்த வேண்டும் என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளும், பள்ளி கல்வி அதிகாரிகள்குழுவால் கண்காணிக்கப்படுகிறது. பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.அதேபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை, அதிகாரிகள் ஆய்வு செய்வர்.
பிளஸ் 1 மாணவர்களின், மதிப்பெண் குறையும் வகையில், அந்த பாடங்களை, பள்ளிகள் நடத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment