தனியார் பள்ளிகளில் 47 சதவீதமாக அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு ஆரம்ப பள்ளிகள் 28 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடக்கும். மாணவர்கள் எண்ணிக்கையை காரணமாக வைத்து தற்ேபாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஆனால், அந்தப் பள்ளிகள் மூடப்படாது, அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று அரசு தெரிவித்து வருகிறது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
செப்டம்பர் மாதம் 24ம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் 10 லட்சத்து 55 ஆயிரத்து 586 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த குழந்தைகளில் 47 சதவீதம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெறும் 26 சதவீத குழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதாவது தனியார் பள்ளிகளில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 758 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 403 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு வெறும் 26 சதவீத குழந்தைகள் மட்டுமே சேர்ந்துள்ளது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment