ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, செ.முத்துசாமி, இரா.தாஸ், மு.சுப்பிரமணியன், ச.மோசஸ், ஆர்.தாமோதரன், கு.வெங்கடேசன், க.மீனாட்சிசுந்தரம் உள்பட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, செ.முத்துசாமி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு முரண்பாடு களைய வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
கடந்த 4-ந்தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், சேலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆயத்த மாநாடும் நடத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேசவில்லை. எனவே வருகிற 27-ந்தேதி திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவோம். இதில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்.
அதற்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விளக்க கூட்டங்களும், வருகிற 24-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடும் நடத்த இருக்கிறோம். ஸ்ரீதர் அறிக்கை குழுவின் பரிந்துரை வராமலேயே, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று முதல்-அமைச்சர் சொல்லி இருப்பதை கண்டிக்கிறோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் வீரியமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment