5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு மையத்தை மூடிவிட்டு இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொருளாளர் பேயத்தேவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு மையத்தை மூடிவிட்டு தொடர் மறியல் போராட்டம் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் சத்துணவு கூடங்கள் அனைத்தும் மூடப்படும். நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம். மேலும், தமிழகத்தில் உள்ள 42 ஆயிரம் பள்ளிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் உள்ளனர்.
நாள்தோறும் 52 லட்சம் பள்ளி குழந்தைகள் சத்துணவை சாப்பிட்டு வருகின்றனர். எனவே, இந்த போராட்டத்தின் மூலம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஒட்டுமொத்த தொகை அமைப்பாளருக்கு ₹5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளருக்கு ₹3 லட்சம் வழங்க வேண்டும், உணவு மானியத் தொகையை ஒரு குழந்தைக்கு ₹5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக தமிழக அரசு உடனடியாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment