சர்வதே அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்க கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் சர்வதேச அறிவியல் திருவிழா உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கெங்கரை அரசுப் பள்ளி மாணவர்கள் மணிகண்டன், பிரகாஷ், மகேஷ், லோகேஸ்வரன், தமிழ்வாணன் ஆகிய 5 பேரைத் தேர்வு செய்ய நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்கள் 5 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
அங்கு மாணவர்களிடம் உள்ள அறிவியல் அறிவை வெளிக்கொணரும் நோக்கில் நாட்டின் தலைசிறந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களை நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், பிற மாநில மாணவர்களுடன் கலந்துரையாடி கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேர்வு பெற்றுள்ள கெங்கரை அரசுப் பள்ளி மாணவர்களுடன், தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், ஆசிரியர் நாகராஜன் ஆகியோரும் செல்கின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மாணவர்களை நெடுகுளா வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ஆசிரியர்கள், பெற்றோர், கிராம மக்கள் பாராட்டினர்
No comments:
Post a Comment