எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கற்பித்தலில் தொழில்நுட்பம் - கட்டுரை!

Tuesday, October 30, 2018




கற்பித்தலில் தொழில்நுட்பம்!
முனைவர் மணி.கணேசன்
                 
அண்மையில் தமிழ்நாட்டில் பரவலான கவனத்தைப் பெற்ற  ஒரு துறையாகப் பள்ளிக்கல்வித்துறை திகழ்கிறது. நாடோறும் புதிய புதிய அறிவிப்புகள், அரசாணைகள், செயல்முறைகள் என உயிர்ப்புடன் சுறுசுறுப்பாக இயங்கிவரும் ஒன்றாகக் காணப்படுகிறது. தொன்றுதொட்டு வரும் தேர்வு முறைகளில் மாற்றம், கலைத்திட்டம்  உருவாக்கம், புதிய பாடத்திட்டம் வடிவமைப்பதற்கான  தொடக்க  முன்முயற்சிகள்,  போட்டித் தேர்வுகளுக்கான கட்டகங்களை உருவாக்குதல் என்று  அதன் செயற்பாடுகள்  ஊடகங்கள்  வாயிலாக  விரிவடைந்து  சென்றுகொண்டிருப்பது  வியக்கத்தக்க  ஒன்றாக  உள்ளது.
                 இதனிடையே,  ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக் கல்வி முறை குறித்தும்  செயல்விளக்கம் தரப்பட்டு பாடக் காணொளிகள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மூலமாக உருவாக்கப்படுகின்றன. பின்னர்,  அவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள காணொளிப் பாடத் தொகுப்புகளுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வழிகாட்டப்படுகின்றன.இதே காலகட்டத்தில், தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உலக மொழிகளுள் தமிழ் மொழியினை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் அனைத்துவகை ஆசிரியர் பெருமக்களுக்கும் வழங்கப்படும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இதுதவிர, கலைத்திட்டம் கருத்துக் கேட்பு மாநாடும் சென்னையில் தற்போது நடந்து முடிந்துள்ளது. மற்றொருபுறம் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் நேரிடையாகக் கிடைக்கப்  பல்வேறு முன்னேற்பாடுகள்  செய்துள்ளதும் வரவேற்கத்தக்கதாகும்.
                   பள்ளிக் கல்வித்துறையின் தொலைநோக்குச் செயல்திட்டங்களும் வழிமுறைகளும் அனைத்துப் பள்ளிகளிலுமுள்ள ஆசிரியர்களைக் கரும்பலகையிலிருந்து விசைப்பலகைக்குப் பரிணாம வளர்ச்சி அடையச் செய்வதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது வெளிப்படை. சராசரி வகுப்பறைகள் மெய்நிகர் கற்றல் வகுப்பறைகளாக உருமாற்றப்படுவது இருபத்தோறாம் நூற்றாண்டின் இன்றியமையாதத் தேவையாக இருக்கிறது.
                 காலம்கடந்த ஞானமாக இருப்பினும், இப்போதாவது தமிழகக் கல்விச் சூழலில் இதுகுறித்த சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் தோன்றியிருப்பது சிறந்ததொரு மாற்றமாகும். குழப்பம் மிகுந்த தமிழ்நாட்டு அரசியல் போக்கில் ஏனைய துறைகளின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் காட்டிலும் பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் முதலானோரிடம் தாக்கமும் செல்வாக்கும் பெற்று, பேசுபடு துறையாக வளர்ச்சி  அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வியில் தகவல் தொழில்நுட்பங்களின் தாக்கம் மற்றும் அவற்றின் உபயோகங்கள் காலமாற்றத்தில் தவிர்க்க முடியாதவை என்பதை உணரத் தலைப்பட்டதே இதற்குக் காரணமாக  உள்ளது.
               இத்தகைய சூழலில், நடப்புகள் கசப்பாகக் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கணினிகளும் பட வீழ்த்திக் கருவிகளும் முறையாக உபயோகப்படுத்தப்படாமலேயே பழுதடைந்துக் கிடப்பது வேதனையளிக்கத்தக்க சேதியாகும். ஆசிரியர்களுக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சிகள் பத்து நாட்கள் மாவட்ட தலைநகரங்களில் கணினிக் கற்றல் மையங்கள் மூலமாக அளிக்கப்பட்டன. ஆனாலும், விசைப்பொறியினைப் பிடிக்கவே அச்சப்படும் நிலையில்தான் பெரும்பாலானோர் காணப்படுகின்றனர். கணினி மற்றும் இணையப் பயன்பாடுகள் என்பவை கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்திற்கு அடிப்படைகளாக உள்ளன. கணினிப் பயன்பாட்டுக் கல்வியறிவு ஒவ்வொரு ஆசிரியரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்பாக உள்ளதை உணர்தலும் உணர்த்துதலும் அவசியமாகக் காணப்படுகின்றது.       
                   இலட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணினித் தொழில்நுட்ப அறிவு கொண்டோரின் எண்ணிக்கையானது மிகக் குறைவாகவே  உள்ளது. இதற்கு அவர்களைக் குற்றம் சுமத்துவது அறமாகா. கற்றல் என்பது தொடர்பயிற்சிகள் மற்றும் தொடர்செயல்பாடுகள் ஆகியவற்றால் நிலைநிறுத்தப்படும் நிகழ்வாகும். இது ஆசிரியருக்கும் பொருந்தும். கடந்த ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை பதிவேடுகள் மற்றும் தாள்கள்  ஆகியவற்றைப் பயன்படுத்திப் பணிபுரிந்து வந்த அத்தனை வங்கிப் பணியினை மேற்கொள்ளும் அனைவரும் இன்று கணினியை வெகுசாதாரணமாகக் கையாண்டு வருவது கண்கூடு.  மாற்றத்தைப் புறந்தள்ளுவதற்கான காரணங்களைத் தேடியலைவதை விடுத்து மனதளவில் ஏற்றுக்கொண்டதன் விளைவாகும். ஆனால், பள்ளியில் இத்தகு சூழல் இன்னும் கனியாமல் உள்ளது.
               இன்றைய சூழ்நிலையில், இப்போதும் வகுப்பறைக்குள் புகும் ஒவ்வோர் ஆசிரியரும் தமக்கென சொந்த பாடப் புத்தகம் இல்லாமல்  அவதியுறும் நிலையுள்ளது. பாடநூலை மாணவரிடம் வேண்டிப் பெற்றுக் கற்பித்தலை நிகழ்த்தும் போக்குகள் களையப்பட வேண்டும். பாடப்புத்தகக் கேட்புப் பட்டியலுடன் பாட அல்லது வகுப்பு ஆசிரியருக்குரியது என்ற ஒன்றையும் சேர்த்து வழங்கினால் இச்சிக்கல் தீரும். ஏனெனில், பள்ளிப் பாடநூல்கள் வெளிச்சந்தையில் நிகழ்காலத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது.
                 அதுபோல், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முற்படும் அரசு , ஆசிரியர்களைப் பற்றிக் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. மரபான ஆசிரியரை நவீனப்படுத்தித் தகவல் தொழில்நுட்ப ஆசிரியராக மாற்றமுறச் செய்யவேண்டுமானால், கற்றல், கற்பித்தலுக்குரிய வளங்கள் அனைத்தும் ஆசிரியருக்கு எளிதாகக் கிடைத்திடுதல் இன்றியமையாதது. அப்போதுதான், அவரால் வகுப்பறைக்குள் புதுமைகளைப் புகுத்த முடியும். பள்ளி மேலாண்மையில்  நவீனக் காலச் சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள ஆசிரியரை வளமுடையதாக்குதல் தலையாயப் பணியாகும். ஏனெனில், வகுப்பறையல் கற்றல், கற்பித்தலை நிகழ்த்துபவராக ஆசிரியரே உள்ளார். அவரைவிடுத்து, கல்வியில் மாற்றங்களைக் கொணர நினைப்பது நேர்மறை விளைவைத் தராது.
                          ஆகவே, மெய்நிகர் வகுப்புகள் திறமுடையதாக அமைய தகவல் தொழில்நுட்பக் கருவிகளை எளிதில் கையாளும் திறன் மற்றும் பயன்படுத்தும் திறன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இயல்பாக அமைந்திடுதல் உறுதி செய்யப்படுதல் அவசியமாகும். அதற்கு ஆண்டுதோறும் ஆசிரியர்கள் தத்தம் பாடப்பொருளுக்கேற்ற மெய்நிகர் வகுப்பறைப் பாடத்திட்டங்கள் மற்றும் காணொளிக்  காட்சிகளைத் தாமே சொந்தமாக உருவாக்க, தக்க வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் முக்கியம். வறண்ட ஆறு வறட்சி போக்காது. ஆகவே, ஆசிரியருக்குரிய   தகவல் தொழில்நுட்ப வளங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருதல் அரசின் கடமையாகும். ஏனெனில், வளமிக்க ஆசிரியரால்தான் வளமான மாணவரை உருவாக்க முடியும்  என்பதில் தீராத நம்பிக்கை  நிரம்ப உண்டு.
                    அதன்  காரணமாக,  இத்தகைய இடர்ப்பாடுகளைப் போக்கிக்  கொள்ளும்  விதமாகத்  திறன்மிகு  கைப்பேசியின்  வாயிலாகப்  பாடப்புத்தகங்களைப்  பதிவிறக்கிக்கொண்டு,  வகுப்பறைகளில்  அவற்றைப்  பயன்படுத்திக்  கற்பிக்கத்  தொடங்கலாம். இதன்மூலம்  மாணவர்கள்  தத்தம்  பாடப்புத்தகத்தில்  பாடங்களை  வகுப்பறையில்  சக  மாணவரின்  பாடநூல்  துணையின்றி  மகிழ்வோடு  கையாளும்  போக்குகள்  அதிகரித்தன. இதன்மூலம் பிள்ளைகளின்  பாடநூலை  வருந்திப்  பெற்றுப்  பாடம்  கற்பிக்கும்  அவலத்திலிருந்து  தப்பிப்  பிழைத்த  திருப்தி  ஏற்படும்.
                    இதுதவிர, உயர்  தொடக்க  நிலை  வகுப்புகளில்  குறிப்பாக  ஆங்கில மொழிப்  பாட  வகுப்பில்  அகராதியின்  பயன்பாடுகள்  தவிர்க்க  இயலாதவையாக  எப்போதும்  காணப்படும்.   ஒரு  புதிய  அறிமுகம்  இல்லாத  சொல்லுக்கு  நடைமுறையில்  உள்ள  தமிழ் – ஆங்கில  அகராதியில்  தக்க  பொருளைத்  தேடிக்  கண்டுபிடிக்க  நேரம்  அதிகம்  விரயமாவது  தவிர்க்க  முடியாததாக  இருந்தது. குறிப்பிட்ட  கால  அளவில்  பாடத்தை  முழுமையாக  நிறைவு  செய்வதில்  இந்நடைமுறை   எனக்கு  உகந்ததாகப்  படவில்லை. அதிக  காலவிரயம்  செய்து  அச்சொல்லிற்கு  உரிய  பொருளை  மட்டுமே  அதில்  கண்டறிய  இயலும். மற்றபடி  அதற்குரிய  சரியான  உச்சரிப்பை  உற்றுக்  கேட்கும்  வாய்ப்புகள்  இப்பயன்பாட்டில்  அறவேயில்லை.
                    இச்சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் திறன்மிகு  கைப்பேசியில்  தமிழ் – ஆங்கில  அகராதிக்கான  நல்லதொரு  செயலியை  நிறுவி,  அதன்மூலம்  பல்வேறு  புதிய  சொற்களுக்குக்  குறைந்த  கால  அளவில்  சரியான  பொருளையும்  தக்க  உச்சரிப்பு  முறையையும்  மாணவர்கள்  தெளிவாக  அறிந்து கொள்ள  வாய்ப்புகளை  உருவாக்கிக்  கொள்ளவியலும். மேலும், கைக்கணிணி  மூலமாக  எதிர்வரும்  ஆண்டுகளில்  ஆறு, ஏழு, எட்டு  வகுப்புகளில்  பயிலும்  மாணவர்கள்  தாமே  தமக்குத்  தெரியாத  புதிய  சொற்கள்  பலவற்றிற்கு  தக்க  பொருள்  மற்றும்  சரியான  உச்சரிப்பு  ஆகியவற்றை  மிக  எளிதாகவும்  வேகமாகவும்  கற்கும்  சூழலை  உருவாக்கித்  தந்தது   மனநிறைவை நிச்சயம் தரும். மேலும்,  மாணவர்கள்  தம்  வீடுகளில்  உள்ள  திறன்மிகு  கைப்பேசியிலும்  இச்செயலியினை  பெற்றோர்  அனுமதியுடன்   நிறுவிக்கொண்டு  உபயோகப்படுத்த  அறிவுறுத்தியது  நல்ல  பலனை  அளிக்கும்.  இதன்மூலம்  மாணவர்களின்  வாசிப்புத்  திறனும்  சொற்களஞ்சியமும்  மேம்பட்டதைக்  கண்கூடாகக்  காண  முடியும்.
              தவிர,  கைப்பேசியால்  பிள்ளைகள்  கெட்டுப்  போகிறார்கள்  என்கிற  பெற்றோர்களிடையே  புரையோடிக்  கிடக்கும்  தவறான  நோக்கும்  போக்கும்  மாறத்  தொடங்கும்.  கைப்பேசி  மூலமாக  நல்ல  பயனுள்ள  பாடம்  சார்ந்த  தகவல்களையும்  பெற்று  கற்க  முடியும்  என்பதை  அறிந்துகொண்ட  பெற்றோரும்  மற்றோரும்  வாயாரப்  பிள்ளைகளின்  முன்னேற்றம்  குறித்துப்  புகழ்வர்.
              அதன்பின், தகவல்  தொழில் நுட்பம்  சார்ந்த  கற்றல்  மற்றும்  கற்பித்தல்  முறைகளில்  அதிக  நாட்டத்தை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளியில்  இருக்கும்  கணிணியானது  பழுதடைந்து  காணப்படும்  நிலையிலும்  பிற  ஆசிரியர்களின்  உபயோகம்  காரணமாகக்  கிடைக்கவியலாத  நிலையிலும்    சொந்தமாக  ஒரு  மடிக்கணினி  ஒன்றை வாங்கித் தம்மை வளப்படுத்திக் கொள்ளுதல் நலம். இதன்காரணமாக, சாதாரண  ஆசிரியர்  நிலையிலிருந்து  ஒருபடி  முன்னேறி, கற்பித்தலில்  தொழில்நுட்ப  பயன்பாட்டு  ஆசிரியர்  என்னும்  புதிய  நிலையை  ஆசிரியர்கள் அடைய வழிகோலும்.
                    இம்மடிக் கணிணியின்  வரவால்  மாநில, மாவட்ட , ஒன்றிய  அளவில்  நடைபெற்ற  தகவல்  தொழில்நுட்பம்  சார்ந்த  பல்வேறு  பயிற்சிப்  பணிமனைகளில்  கற்றும்  பெற்றும்  வந்த  அறிவை  வகுப்பறைகளில்  துணிவோடும்  துடிப்போடும்  பயன்படுத்திக்  கற்றலை  எளிதாகவும்  இனிதாகவும்  புதிதாகவும்  மாணவர்கள்  பெற  வழிவகுக்க இயலும்.ஆங்கிலம்  மற்றும்  தமிழ்ப்  பாடங்கள்  சார்ந்த  காணொலிகளைப்  பதிவிறக்கிக் கொண்டு  இறுகி,  வறண்ட  மொழிப்  பாட  வகுப்புகளை  மகிழ்ச்சி  வெள்ளம்  பொங்க    உயிரோட்டம்  மிக்கதாக  மாற்றிக்  காட்டியது  ஏனைய  ஆசிரியர்களுக்கு  மிகுந்த  வியப்பாக  அமைந்து அதனைப் பின்பற்றிட உந்துசக்தியாகக் காணப்படும்.
                  மைக்ரோசாப்ட்டின்  ஸ்வே (Sway) தொழில்நுட்பத்தில்  பாடங்களை  எளிதில்  புரிந்து கொள்ளத்தக்க  வகையில்  ஆடியோ , வீடியோ, படங்கள்  போன்றவற்றை  உள்ளீடு  செய்து  கண்கவரும்  அழகிய  காணொலிகளாக  வழங்கும்போது  கற்றலானது  மாணவர்களிடையே  நீடித்து  நிலைத்து  விளங்குவதை  நன்கு  உணர  முடியும்.  இத்தொழில்  நுட்பம்  நமக்கு  ஒரு  பெரிய  வரமாகும்.
                 மேலும்,  வகுப்பறைகளில்  தகவல்  தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்திக்  கற்றல் – கற்பித்தல்  நிகழ்வைச்  செம்மைப்படுத்தும்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் தம் கற்பித்தல்  அணுகுமுறைமீது  நம்பிக்கையும்  பெருமிதமும்  உண்டாவதைத்  தவிர்க்க  முடியாது.  இதன்காரணமாக  மாணவர்கள்  என்றென்றும்  நேசிக்கும்  நல்ல  ஆசிரியராகத்  திகழும்  நல்வாய்ப்பு  என்றென்றும்  கிட்டும்.
தொடர்பு முகவரி: வீடு                                                                     பள்ளி
முனைவர் மணி. கணேசன்                                            பட்டதாரி ஆசிரியர்
4/11-2, ராஜீவ் காந்தி நகர்                                                ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மன்னார்குடி – 614001                                                      மேலகண்டமங்கலம் - 614718
திருவாரூர் மாவட்டம்.                                                  கோட்டூர் ஒன்றியம்
7010303298                                                                           திருவாரூர் மாவட்டம்
manii_ganesan@ymail.com

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One