புதுக்கோட்டை,அக்.29 : தமிழக கல்வித்துறையும் ,மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கணினி வளங்களை கையாண்டு இணைய வழியில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்கள்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்திட்டமும் ,மைக்ரோசாப்ட் நிறுவனும் இணைந்து 200 ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியானது மாவட்ட திட்ட அலுவலத்தில் நடைபெற்றது.
பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்துப் பேசியதாவது: கிராம்ப் பகுதி மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் வகையில் கல்வி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தனித் திறன்மிக்கவர்களாக விளங்கிட வேண்டும்..புதிய பாடநூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீடுகளைப் பயன்படுத்தி கற்றுக் கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.ஒரு விடைக்கு பல்வேறு வினாக்கள உருவாக்கும் திறன்களை ஆசிரியர்கள் உருவாக்கிட வேண்டும்..பல்லூடகங்களை பாதுகாப்புடன் பயன்படுத்தி கற்பிக்கும் உத்திகளை கால மாற்றத்திற்கு ஏற்ப ஒன் ட்ரைவ்,ஒன் நோட்,ஸ்வே போன்ற மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்து பெற்றோர்களது நன்மதிப்பினை பெற்று அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.இந்த பயிற்சியினை சிறப்பாக பெற்று மாணவர்களுக்கு கொண்டு சென்று அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய ஆசிரியர்களாகிய நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாமை குறித்து பேசினார்.
கருத்தாளர்களாக செவ்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் காசிராஜன்,இலைகட்டிவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் காசிவிஜயன் ஆகியோர் கலந்து கொண்டு பயற்சியினை அளித்து வருகிறார்கள்.
பனங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் கருப்பையன் ஒருங்கிணைத்து வருகிறார்..
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது..
No comments:
Post a Comment