உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகள் சீராகச் செயல்படும்; தசைகள் விரிவடையும்; உடல் சோர்வு நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும்; நிம்மதியான தூக்கம் வரும். இப்படியாக உடற்பயிற்சியின் பலன்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய சூழலில் உடற்பயிற்சியின்மை குறைந்துபோனதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் மற்றும் புகைபிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக்காட்டிலும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படித்தான் சொல்கிறது 'க்ளீவ்லேண்ட் கிளினிக்' (Cleveland Clinic) என்னும் அமெரிக்க கல்வி மருத்துவ மைய .ஆய்வு முடிவு .. இது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஜெ.ஏ.எம்.ஏ (JAMA) மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1991 முதல் 2014-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிரெட்மில் பரிசோதனைக்கு (treadmill testing) உட்படுத்தப்பட்டனர். அத்துடன் இதயத்துக்கான பயிற்சிகள் மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இப்பயிற்சிகளின் முடிவில், சம்பந்தப்பட்டவர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 70 வயதைத் தாண்டிய, உயர் ரத்த அழுத்தம் உள்ள முதியோர் ஏரோபிக் பயிற்சி செய்ததன் மூலம், அவர்கள் உடல்ரீதியாக அதிக பயனடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒருநாளில் இவ்வளவு நேரம்தான் பயிற்சி செய்ய வேண்டும் என்ற எந்தவித வரைமுறையும் இல்லாமல், விரும்பும்போதெல்லாம் ஏரோபிக் பயிற்சிகளைச் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
`க்ளீவ்லேண்ட் கிளினிக்'கின் மூத்த இதய நோய் நிபுணர் வீல் ஜெபர் (Dr Wael Jaber) இந்த ஆய்வு குறித்து கூறும்போது, 'ஏரோபிக் பயிற்சிகள் மற்ற பயிற்சிகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தவை. மேலும், உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, அதிதீவிரமான பயிற்சி என்று எதுவும் இல்லை. அதேநேரம், மிகவும் குறைவான பயிற்சிகளும் உள்ளன. ஆனால், பயிற்சியே செய்யாமல் இருந்தால், ஏற்படும் பாதிப்புகள் புகை பிடித்தல் மற்றும் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இந்த முடிவு, நாங்களே எதிர்பார்க்காத ஒன்றுதான்' என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment