ரத்தம் அனைவருக்கும் ஒரே நிறம்தான். ஆனால், ஒரே வகை கிடையாது. மனித ரத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வகை இருக்கின்றன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை.
1901-ல் ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி கார்ல் லான்ஸ்டீனர் (Karl Landsteiner) ரத்த வகைகளைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு 1930-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரத்தச் சிவப்பணுக்களில் ‘ஆன்டிஜன்’ எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இது பெற்றோரிடமிருந்து மரபுவழியாக நமக்கு வருகிறது. ஏ, பி, எம், என் எனப் பலதரப்பட்ட ஆன்டிஜன்கள் உள்ளன. ஒரு சிவப்பணுவில் என்ன ஆன்டிஜன் உள்ளதோ, அதைப் பொறுத்து ஒருவருக்கு ரத்த வகை அமைகிறது.
சிவப்பணுக்களில் ‘ஆன்டிஜன்’ இருப்பதுபோல், ரத்த பிளாஸ்மாவில் ‘ஆன்டிபாடி’ எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இது ஆன்டிஜனுக்கு நேர்மறையான ஒரு வேதிப்பொருள். இதை வைத்தும் ரத்த வகை பிரிக்கப்படுகிறது.
சிவப்பணுவில் ஏ ஆன்டிஜன் இருப்பவர்கள் ஏ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிளாஸ்மாவில் ஆன்டி – பி ஆன்டிபாடி இருக்கும். பி ஆன்டிஜன் கொண்டவர்கள் பி ரத்த வகையினர். இவர்களுக்கு ஆன்டி – ஏ ஆன்டிபாடி இருக்கும். சிலருக்கு ஏ, பி இரண்டு ஆன்டிஜன்களும் இருக்கும்; ஆனால், எந்த வகை ஆன்டிபாடியும் இருக்காது. இவர்கள் ஏபி ரத்த வகை உடையவர்கள். இன்னும் சிலருக்கு எந்த ஆன்டிஜனும் இருக்காது. ஆனால், இரண்டு வகை ஆன்டிபாடிகளும் இருக்கும். இவர்கள் ஓ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள். ஏ ரத்த வகையில் ஏ1, ஏ2; ஏபி ரத்த வகையில் ஏ1பி, ஏ2பி எனத் துணை வகை உண்டு.
இந்த மாதிரி ரத்த வகையைப் பிரிப்பதற்கு ‘ஏபிஓ ரத்த வகை முறை’ (ABO Blood System) என்று பெயர். இதன்படி அந்தந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு அதே ரத்த வகையைச் சேர்ந்தவர்களிடமிருந்து ரத்தத்தைப் பெற்றுச் சிகிச்சை அளிக்கும் முறை அலோபதி மருத்துவத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால், சிலருக்கு அவர்களுடைய ரத்த வகையையே செலுத்தினாலும், பொருந்தவில்லை. என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
கார்ல் லான்ஸ்டீனரும் அமெரிக்க விஞ்ஞானி வெய்னரும் (Weiner) இணைந்து 1937-ல் காரணம் கண்டுபிடித்தனர். சிவப்பணுக்களில் ‘ஆர்ஹெச்’ எனும் இன்னோர் ஆன்டிஜன் இருப்பது அப்போது தெரியவந்தது. இதுக்கு ‘ஆர்ஹெச் காரணி’ (Rh factor) அல்லது ‘டி-ஆன்டிஜன்’ (D-antigen) என்று பெயர். இது எல்லோருக்கும் இருக்காது. ஆகவே, இது இருப்பவர்களின் ரத்தம் ‘ஆர்ஹெச் பாசிட்டிவ்’ என்றும், இது இல்லாதவர்களின் ரத்தம் ‘ஆர்ஹெச் நெகட்டிவ்’ என்றும் பிரிக்கப்பட்டது. இந்த வகையில் ரத்தத்தை வகைப்படுத்தும் முறைக்கு ‘ஆர்.ஹெச். வகை முறை’ (Rh system) என்று பெயர். முதன்முதலில் ‘ரீசஸ்’ எனும் குரங்கு இன ரத்தத்தில் ‘ஆர்ஹெச் காரணி’ கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு ‘Rhesus factor’ என்று பெயரிட்டனர்.
ரத்த வகைக்கு என்ன முக்கியத்துவம்?
விபத்தில் அடிபட்டு ரத்தம் வெளியேறும்போது, சில நோய்கள் காரணமாக உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, அறுவை சிகிச்சையின்போது எனப் பல அவசர நிலைகளில் ரத்தம் செலுத்தப்பட வேண்டி வரலாம். அப்போது ரத்த வகையை மாற்றிச் செலுத்திவிடக் கூடாது. அதற்குத்தான் ரத்த வகையைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
பொதுவாக, ஓ நெகட்டிவ் ரத்த வகை அனைவருக்கும் பொருந்தும். ஓர் அவசரத்துக்கு இதைக் கொடுக்கலாம். இவர்களை ‘எல்லோருக்கும் உரியக் கொடையாளர்கள்’ (Universal donor) என்கிறோம். ஏபி பாசிட்டிவ் ரத்த வகை உள்ளவர்கள் எந்த வகை ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். இவர்களை ‘எல்லாம் ஏற்றுக்கொள்கிறவர்கள்’ (Universal Recipient) என அழைக்கிறோம்.
‘பாம்பே’ ரத்த வகை
மனித ரத்த வகையில் மிக அரிதான ரத்த வகையும் இருக்கின்றன. அவற்றில் ‘பாம்பே ரத்த வகை’ (Bombay blood group) முக்கியமானது. இதை முதன்முதலில் 1952-ல் மும்பையில் (அப்போதைய பாம்பே) டாக்டர் பெண்டே (Dr. Bhende) என்பவர் கண்டுபிடித்ததால் இந்தப் பெயர். அரிசி மாவு இருந்தால்தான் அதை இட்லியாகவோ, இடியாப்பமாகவோ அவிக்க முடியும். அது மாதிரிதான் ஏ, பி ஆன்டிஜன்களை உற்பத்தி செய்ய சிவப்பணுக்களில் ‘ஹெச் ஆன்டிஜன்’ இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் எந்த ஆன்டிஜனும் உற்பத்தியாகாது. இவ்வாறாக ஹெச், ஏ, பி ஆன்டிஜன்களை இழந்த விசித்திரமான ரத்த வகை இது. இந்தியாவில், குறிப்பாக மும்பையில்தான் இந்த அரிதான ரத்த வகை உள்ளவர்கள் அதிகம்.
கார்ல் லான்ஸ்டீனர்
‘ரத்த தானம்’ தெரியுமா?
ஆரோக்கியமாக உள்ள ஒருவர் 18 வயதுக்கு மேல் 60 வயது வரைமூன்று மாதங்களுக்கு ஒருமுறை 300 மில்லி ரத்தத்தைத் தானம் செய்யலாம். இப்படித் தானம் செய்யப்பட்ட ரத்தம், இரண்டு வாரங்களுக்குள் மறுபடியும் கொடையாளர் உடலில் உற்பத்தியாகிவிடும்.
‘ரத்த வங்கி’ என்பது என்ன?
ஒருவர் தானம் செய்யும் ரத்தத்தைச் சேகரித்து, அணுக்களைப் பகுத்துப் பதப்படுத்தி, சேமித்து, தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் நிறுவனம், ரத்த வங்கி (Blood bank). ஒருமுறை தானமாகப் பெற்ற ரத்தத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் 4 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியில் வைத்து 30 நாட்களுக்குப் பாதுகாக்கலாம். கொடையாளரின் ரத்த வகையும் அதைப் பெறுகிறவரின் ரத்த வகையும் ஒன்று போலிருக்கிறதா, அந்த ரத்தம் புதியவருக்குப் பொருந்துகிறதா எனப் ‘பொருத்தம்’ பார்த்து, ஒப்புதல் கொடுக்க வேண்டியது ரத்த வங்கியின் முக்கியப் பணி. அதன் பிறகே ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ரத்த வகை உண்டு, ஆனால், இனத்துக்கு இனம் ரத்த வகைகயின் எண்ணிக்கை வேறுபடுகிறது
No comments:
Post a Comment