உலகின் மிகப் பெரிய கடல் பாலம் அக்டோபர் 24ஆம் தேதி திறக்கப்படுகிறது.
சீனாவின் ஜுஹாய் மேகோவிலிருந்து ஹாங்காங் வரை 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மிகப் பெரிய கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பியர்ல் ஆறு கடலில் கலக்கும் தெற்கு சீன கடல் பகுதியில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தப் பாலம்தான் உலகின் மிகப்பெரிய கடல் பாலமாகும். பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2009ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் வரவுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் - ஜூஹாய் மேகோ பாலத்தின் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பியர்ல் ஆற்றின் டெல்டா பகுதிகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவரையில் ஹாங்காங்கிலிருந்து ஜுஹாய் செல்ல 3 மணி நேரம் செலவானது. இனிமேல் இந்தப் புதிய பாலத்தின் வழியாக 30 நிமிடங்களில் செல்லலாம். அக்டோபர் 24ஆம் தேதி இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலத்தின் வழியாக 2030ஆம் ஆண்டில் தினசரி 29,100 வாகனங்கள் பயணிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் செயல்பாட்டுக்கு வந்தால் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை நேரடியாக இணைக்கும் விதமாக அமையும் எனவும், இதனால் லாண்டவு ஐஸ்லாந்து பகுதிகளில் போக்குவரத்துக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்படும் எனவும் ஹாங்காங் சட்ட வல்லுநர்கள் எச்சரிப்பதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
No comments:
Post a Comment